Subscribe

BREAKING NEWS

08 March 2018

ஸ்ரீ ராமரின் வழியில் தீர்த்தகிரி யாத்திரை

என்னப்பா? ஆரம்பமே ஸ்ரீ ராமரின் வழியில் என்று ஐயம் கொள்ள வேண்டாம். அவர் காலடித் தடத்தில் நம் உயிர் மூச்சு எப்படியாவது இங்கு பட்டிருக்கும். அதனால் தான என்னவோ? ஏகப்பட்ட 
அனுமார் தரிசனம். அவ்ளோ அனுமார். நாம் கையில் உணவுப் பண்டம்  எதையும் இங்கு  எடுத்து செல்ல இயலாது. நாம் பொறி வாங்கி கொண்டு வந்தோம். ஆனால் அவர்களின் விருப்பம் என்னவோ? பிஸ்கட்களின் மீது தான். அவற்றின் உரையை பிரிக்கும் முன்பாகவே, வந்து லாவகமாக நம்மிடம் எடுத்துச் சென்றார்கள். அவர்களிடம் இருந்து தானே நாமே வந்தோம். வழி நெடுக ராம நாமம் உச்சரித்துக் கொண்டும், அகத்தியர் கீதம் இசைத்துக் கொண்டும் நாம் யாத்திரையைத் தொடர்ந்தோம்.



ராம பிரான் சிவபெருமானை இரண்டிடங்களில் பிரதிஷ்டை செய்து சிவபூஜை செய்துள்ளார். அதில் ஒன்று பெருஞ்சிறப்பு பெற்ற ராமேசுவரம். மற்றொன்று தீர்த்தங்கள் நிறைந்த தீர்த்த மலை.
தீர்த்தங்கள் : இத்தலத்தின் மிக விசேஷமானவை தீர்த்தங்கள் ஆகும்.அற்புத மூலிகைகளின் சத்து கலந்து விளங்குவதால் பக்தர்களின் உடற்பிணி உளப்பிணி யாவும் தீர்ந்து புத்துணர்வும் புதுவாழ்வும் பெறுகின்றனர். மலை மீது அமைந்துள்ள இக்கோயிலில் இந்த தீர்த்தங்களின் சிறப்பு பின்வருமாறு :
ராமர் தீர்த்தம் : மரம் செடி கொடி இலைகளில் இருந்தும் பாறைகளில் இருந்தும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட அரிய தீர்த்தம் இது. இராமனுக்காக அருளப்பெற்று இதில் ராம ஜெயம் என்று முழுகினால் சகல பாவங்களும் நீங்கும் என்று புராணம் கூறுகிறது.

குமார தீர்த்தம் : முருகனை தேவ சேனாதிபதியாக நியமித்த போது இத்தீர்த்தத்தால் முருகனுக்கு அபிஷேகம் செய்தனர் என புராணம் கூறுகிறது. முருகனுக்காக வழங்கப்பட்ட இத்தீர்த்தத்தை தெளித்துக் கொள்வதாலும் பருகுவதாலும் உயர்ந்த வாழ்வும் ஞானமும் பெருகும்.

கௌரி தீர்த்தம் : இது அன்னை வடிவாம்பிகைக்காக வழங்கப்பெற்றது. இத்தீர்த்தத்தை கொண்டு இறைவனை வழிபாடு செய்ததால் அன்னை வடிவாம்பிகை இறைவனை மணந்தார். இறைவனின் இடப்பாகத்தில் இடம் பெற்றவள் என புராணம் கூறுகிறது. இதனைக் கொண்டு அம்மை அப்பரை வணங்கினால் திருமண பாக்கியம் கிடைக்கும். திருமண தடையாக இருக்கும்.சகல தோசங்களும் நீங்கும். இல்லறம் நல்லறமாக இருக்கும்.

அகஸ்தியர் தீர்த்தம் : அகத்திய மாமுனிவரின் குன்ம நோய் (அல்சர்) நீங்க இறைவனால் அருளப்பெற்றது. இத்தீர்த்தம் தாமிர சத்தும் மூலிகைகளின் சக்தியும் கொண்ட இத்தீர்த்தத்தை குடிக்கவும், உணவு சமைக்கவும் பயன்படுத்தி வந்தால் அல்சர் நீங்கி ஜீரண சக்தி கிடைக்கும். வயிற்று வலியும் குணமடையும்.

அக்னி தீர்த்தம் : அக்னி தேவனின் பெண்ணாசையால் ஏற்பட்ட பாவங்களைப் போக்கிய தீர்த்தம் இது. இதனால் உடலின் தட்பவெப்பம் சமமாகும். ஆஸ்துமா அடிக்கடி சளிப்பிடித்தலும் குணமாகும்.

1000 வருடங்களுக்கும் மேலாக பழமை வாய்ந்த கோயில் இது. 1041 ல் ராஜ ராஜ குலோத்துங்க சோழனால் திருப்பணி நடைபெற்ற பழமையான கோயில் இது. அருணகிரி நாதர் இத்தலம் குறித்து பாடியுள்ளார். மலை மீது அமைந்த அற்புதமான சிவ தலம் இது.


இதோ நந்தியம்பெருமானை வணங்கி நாம் மீண்டும் யாத்திரையைத் தொடர்ந்தோம். இப்பொழுது பாதை சற்று நன்றாக இருந்தது. வழியில் யாசகர்கள் இருந்தார்கள். நாமும் ஒரு வழியில் யாசகர்கள் தானே. நாம் கோயிலின் உள்ளே சென்று யாசிக்கின்றோம். இவர்கள் கோயிலின் வெளியே யாசிக்கின்றார்கள். ஆனால் யாசிப்பது என்னவோ உண்மைதான். இடமும்,பொருளும் தான் வேறு வேறு.




மணி சரியாக 8:45 இருக்கும். சூரியன் நன்கு பிரகாசமாய் நம்மை நோக்கி கதிரொளி தந்து கொண்டிருந்தார். இயற்கையின் அழகே தனி தான். பசுமை இங்கே குறைவாய் இருந்தாலும், மனதிற்கு நிறைவாய், கதிரவனின் கண்காணிப்பில்,ஆஞ்சநேயர்களின் அணிவகுப்பில் நாம் சென்று கொண்டே இருந்தது. அகத்தியர் கீதம் நமக்கு வழித்துணையாய் இருந்தது. என்னப்பா? ஒரே அகத்தியர் கீதம் என்று அங்கலாய்க்க வேண்டாம். கீதத்தில் நீங்கள் கேட்டுப் பாருங்கள். அறுசுவை உணவை உண்டிருப்போம். அறுசுவை இசையை கேட்க வேண்டுமாயின் அகத்தியர் கீதமே.ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு சுவை. இதோ கோயிலை நெருங்கி விட்டோம் என்று தோன்றியது.



ஆம்.திருக்கோயிலின் அருகில் வந்து விட்டோம். அப்படியே சற்று ஆசுவாசப்படுத்திவிட்டு அப்படியே கோயிலினுள் நுழைந்தோம்.




கோயிலினுள் இருந்த மலை தாத்தா மகான் தரிசனம் உங்களுக்காக 


கோயிலினுள் இருந்த மிகப் பெரிய புற்று. 


தமிழே இறை. அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ் கண்டு ..முருகா..சரணம் என்று வேண்டினோம்.



பாட்டி லுருகிலை கேட்டு முருகிலை
     கூற்று வருவழி பார்த்து முருகிலை
          பாட்டை யநுதின மேற்று மறிகிலை ...... தினமானம்

பாப்ப ணியனருள் வீட்டை விழைகிலை
     நாக்கி னுனிகொடு ஏத்த அறிகிலை
          பாழ்த்த பிறவியி லேற்ற மனதுநல் ...... வழிபோக

மாட்ட மெனுகிறை கூட்டை விடுகிலை
     யேட்டின் விதிவழி யோட்ட மறிகிலை
          பார்த்து மினியொரு வார்த்தை அறைகுவ ...... னிதுகேளாய்

வாக்கு முனதுள நோக்கு மருளுவ
     னேத்த புகழடி யார்க்கு மெளியனை
          வாழ்த்த இருவினை நீக்கு முருகனை ...... மருவாயோ

ஆட்டி வடவரை வாட்டி யரவொடு
     பூட்டி திரிபுர மூட்டி மறலியி
          னாட்ட மறசர ணீட்டி மதனுடல் ...... திருநீறாய்

ஆக்கி மகமதை வீட்டி யொருவனை
     யாட்டின் முகமதை நாட்டி மறைமக
          ளார்க்கும் வடுவுற வாட்டு முமையவ ...... னருள்பாலா

சீட்டை யெழுதிவை யாற்றி லெதிருற
     ஓட்டி யழல்பசை காட்டி சமணரை
          சீற்ற மொடுகழு வேற்ற அருளிய ...... குருநாதா

தீர்த்த எனதக மேட்டை யுடனினை
     ஏத்த அருளுட னோக்கி அருளுதி
          தீர்த்த மலைநகர் காத்த சசிமகள் ...... பெருமாளே.


மனமே, நீ பாட்டின் பொருளை அறிந்து உருகுதல் இல்லை, பாட்டின் பொருளைச் சொல்லக் கேட்டும் உருகுதல் இல்லை, யமன் வரும் வழியைக் கண்டும் இறைவனிடம் பக்தியால் உருகுவதில்லை, கஷ்டங்களை தினமும் அனுபவித்தும் உண்மைப் பொருளை நீ அறிவதில்லை, நாள்தோறும், பாம்பை அணிந்த சிவபிரான் அருளும் மோக்ஷ இன்பத்தை விரும்புவதும் இல்லை, நுனி நாக்காலாவது இறைவனைப் போற்றும் துதி சொல்ல அறிகின்றாய் இல்லை, பாழ்பட்ட இந்தப் பிறப்புக்களிலே மீண்டும் பிறப்பெடுத்து உழலும் மனமே, நீ நல்ல வழியிலே போகமாட்டேன் என்று சொல்கிறாய். 

உடல் சிறையாகிய இந்தக் கூட்டை விடுகின்றதாக நீ இல்லை, ஏட்டில் உனக்கென எழுதிவைத்த தலைவிதி எந்த வழியிலே உன்னைச் செலுத்துகிறது என்று நீ அறிகின்றிலை, உன் நிலைமையைப் பார்த்தும் சும்மா இருக்க முடியாமல் நான் இனி உனக்கு ஒரு நல்வார்த்தை கூறுகிறேன் - இதை நீ கேட்பாயாக. அவனது திருப்புகழை ஓதி அவனைத் துதிக்க உனக்கு நல்ல வாக்கையும் உன் உள்ளத்தில் நல்ல தரிசனத்தையும் அவன் உனக்கு அருள்வான். 

அடியார்களுக்கு அவன் வெகு எளியனானவன். அவனை வாழ்த்தினால் நல்வினை தீவினை இரண்டையுமே விலக்கும் முருகனை நீ இனி சிந்திப்பாயாக. உலகையே ஆட்டி வைப்பவரான சிவபிரான் வடக்கில் உள்ள மேருமலையை வருத்தி வில்லாக வளைத்து, வாசுகி என்ற பாம்பை நாணாகக் கட்டி, திரிபுரத்தில் தீ மூட்டி, யமனுடைய ஆணவம் அழியும்படி பாதத்தை நீட்டி அவனை உதைத்துத் தள்ளி, மன்மதனுடைய உடலைச் சாம்பலாகும்படி எரித்து தக்ஷனின் யாகத்தை அழித்து, அந்த தக்ஷனைக் கொன்று ஆட்டின் தலையை அவனது உடலின் மீது பொருத்தி, வேதவல்லி ஸரஸ்வதிதேவியின் உடலில் காயம் ஏற்படும்படி அவளை வாட்டியவரும், உமாதேவியின் கணவருமான சிவபிரான் அருளிய பாலனே, திருப்பாசுரம் எழுதிய ஏட்டை வைகையாற்று வெள்ளத்தில் எதிர்த்து ஏறும்படியாக ஓட்டியும், நெருப்பிலே இட்ட ஏடு பச்சைநிறத்துடன் விளங்கும்படி காட்டியும், (வாது செய்து தோற்ற) சமணர்களைக் கோபித்துக் கழுவேற வைத்தும், அருள் செய்த (திருஞானசம்பந்தனாக வந்த) குருநாதனே, பரிசுத்தனே, என் மனம் விருப்பத்துடன் உன்னை துதிக்கும்படி நீ திருவருளுடன் கண்பார்த்து அருள வேண்டும். தீர்த்தமலை நகரின் காவல் தெய்வமான பெருமாளே, இந்திராணி மகள் தேவயானையின் பெருமாளே. 

அப்படியே கோயிலின் உள்ளே சென்றால் அப்ப்பா தீர்த்தங்கள் கண்டோம். தீர்த்தத்திற்கு அப்படியென்ன மகிமை. வெறும் சாதாரண நீர் இறைவனின் சந்நிதியில் வைத்து தரும் போது தீர்த்தம் என்றாகி மகத்துவம் பெறுகின்றது. அது போல் தான் நீர் இருக்கும் பாத்திரம் பொறுத்து ,நீரின் சுவை மாறுபடுகின்றது, மகத்துவம் பெறுகின்றது. இப்போது தாமிர பாத்திரத்தில் நீர் குடிப்பது வழக்கமாகி விட்டது. அது போல் இந்த மலையில்  உள்ள நீரூற்றுகள் மூலம், இயற்கை மூலிகைகள் இந்த நீரில் கலந்து, உயிர் கலப்பு பெற்று, பிரபஞ்ச ஆற்றல் பெற்று வருகின்ற தீர்த்தம் என்றால் சொல்லவும் வேணுமா? இது போல் ஒரு தீர்த்தம் இருந்தால் பரவாயில்லை. ஐந்து  தீர்த்தங்கள் இங்கே கண்ணுற்றோம்.




இதோ...ராமர் தீர்த்தம் 


கௌரி தீர்த்தம் இதோ.



ராமர் தீர்த்தம் மேலே உள்ள உச்சியிலிருந்து வர வேண்டும்.


குமார தீர்த்தம் இதோ.



ராமர் தீர்த்தப் பாதை இங்கே... இந்த மெயின் தீர்த்தத்துல(ராமர் தீர்த்தம்) எப்பவுமே தண்ணி வந்தபடியே இருக்கும். மழைக்காலமாக  இருந்தால்  கொஞ்சம் அதிகமாக  வரும். மத்த நாட்கள்ல மலைஉச்சியில சின்னதா ஒரு பைப் பொருத்தியிருப்பாங்க..அந்த பைப் வழியா மெல்லிசா, தண்ணி கொட்டிகிட்டே இருக்கும்..இந்த பைப் வழியாதான் தீர்த்தம் கொட்டிட்டு இருக்கும்.

இதுலதான்..சிலசமயம் ஒரு ஆச்சர்யம் நடக்கும்...இந்த தீர்த்தத்துல சிலருக்குமட்டும் குளிக்க போய் நிக்கும்போது, தண்ணியே வராது..என்னன்னு மேல பாத்தா, சில குரங்குகள்(அனுமன்..?) வந்து அந்த பைப்ப கை வச்சு அடைச்சிட்டிருக்கும்..இவங்க...கீழே இருந்து பதறுவாங்க..நாம ஏதோ செய்யக்கூடாத தப்பு செஞ்சிருக்கோம்..அதான் ஆஞ்சநேயரு வந்து தீர்த்தம் கிடைக்காம செய்யறாருன்னு சொல்லிட்டு அவரபாத்து,"..ஆஞ்சநேயா ..ஆஞ்சநேயா.." ன்னு புலம்புவாங்க.ஆனா, அந்த குரங்குகள் தீர்த்த பைப்ல இருந்து கைய எடுக்கவே எடுக்காது.அதுமட்டுமில்லாம, அவங்களப்பாத்து பயங்கரமா முகத்த வச்சிகிட்டு உறுமவும் செய்யும்.

இத சரிபாக்கறதுக்காகவே, அங்க குளிக்க நின்னுட்டு இருக்கற, மத்தவங்க நகர்ந்து வந்து அந்த தீர்த்தம் விழுற இடத்துல வந்து நிப்பாங்க..இப்ப அந்த குரங்கு கைய எடுத்துடும்..திரும்பவும், தீர்த்தம் கீழே விழும்..மத்தவங்க எல்லாம் குளிக்கலாம்.ஆனா, திரும்பவும், அந்த பழைய நபர், தானும் இப்ப தீர்த்தத்துல குளிச்சிடலாம்னு கூட்டத்துல இருந்து நகர்ந்து வந்தார்னா, திரும்பவம், குரங்கு பைப்பை மூடிரும்..

இந்த கூத்து இப்படியேதான் நடந்திட்டு இருக்கும்.

சம்மந்தப்பட்ட நபர், அங்கிருந்து கோயிலுக்குப்போய் மனதார தான் எதோ தப்பு பண்ணியிருக்கேன்..அத மன்னிச்சிருன்னு வேண்டிகிட்டு திரும்பவும் வந்தா, சில சமயங்கள்ல தீர்த்தம் கிடைக்கும்..சிலருக்கு அதுவும் கிடைக்காது. இது அங்கு இருந்தவங்க சொன்ன செய்தி. ஆனா நாம பாக்கும்போது தீர்த்தம் கொட்டிட்டு தான் இருந்தது. கொஞ்ச நேரம் மூணு பேரும் கொஞ்சம் உக்காந்தோம். நேரம் 9 மணி ஆயிடுச்சு. சுமார் 12 மணி வரை இங்கே தான் நாம இருக்க போறோம். அதனால மெதுவா தீர்த்தமாடலாம் னு நெனச்சோம்.நமக்கு ஆஞ்சநேயர் தரிசனம் கௌரி தீர்த்தத்துல கெடச்சது.நீங்களே ஒவ்வொன்றாக பாருங்கள்.



குமார தீர்த்தத்துல தீர்த்தம் ரொம்ப குறைவு தான். சின்ன மூடியில பிடிச்சு தான் தலையில தெளிச்சுக்கணும்.








கௌரி தீர்த்தத்துல தீர்த்தம் வந்துகிட்டு இருந்துச்சு. ஆஞ்சநேயர் வந்து சில ரகளை பண்ணிட்டு இருந்தாரு. அங்கே பெரிய பெரிய ஈக்கள் ரொம்ப இருந்துச்சு. ஆனால் ஒரு ஈ கூட வந்து நம்மள கொட்டாம இருந்துச்சு ..இது கொஞ்சம் ஆச்சர்யம் தான். நேரம் ஆக,ஆக மக்கள் கூட்டமும் அதிகமா வந்துகிட்டு இருந்தாங்க. நாமும் ஒவ்வொருத்தரா தீர்த்தமாடினோம். இங்கேயே மூன்று தீர்த்தம் ஆடிட்டோம். அப்புறமா மாசி மக பூசைக்கு தீர்த்தம் பிடிச்சிட்டு இருந்தோம். செல்லப்பன் அண்ணனும்,வினோத்தும் அந்த பக்கம் போய் ரெண்டு  தீர்த்தம் பிடிச்சிட்டு வந்தாங்க. மொத்தமாக தீர்த்தமாடிட்டு அப்படியே வெளியே வந்தோம்.

தீர்த்தகிரீஸ்வரர் தரிசனத்துக்கு முன்னாடி, பிரகாரம் சுற்றி வழிபட நினைத்தோம்.





முதல் தரிசனமே காசி விஸ்வநாதர். சொல்லில் அடங்கா தரிசனம் அது. அடுத்த பதிவில் தரிசனம் தொடருவோம்.

மீள்பதிவாக :-

யாத்திரையாம் யாத்திரை...தீர்த்தகிரி யாத்திரை - http://tut-temple.blogspot.in/2018/03/blog-post_7.html

No comments:

Post a Comment