Subscribe

BREAKING NEWS

24 March 2018

கருணை வடிவில் கச்சாலீஸ்வரர்(கச்சப -இதி - ஈஸ்வரர்) திருக்கோயில்


அருள்மிகு கச்சபேஸ்வரர் என்றும், கச்சாலீஸ்வரர் என்றும் இந்த திருக்கோயில் அழைக்கப்பட்டு வருகின்றது. புண்ணிய பூமியாம் சென்னையில் எத்துணை எத்துனை கோயில்கள். சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோயில் சுற்றியே ஏகப்பட்ட கோயில்கள் உண்டு. இதற்கு நமக்கு ஒரு நாள் போதாது.

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர் கோயில்
அருள்மிகு சென்னகேசவ பெருமாள் கோயில்
அருள்மிகு சென்ன மல்லீஸ்வரர் கோயில்
அருள்மிகு பைராகி மடம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில்
அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயில்
அருள்மிகு கல்யாண வெங்கடேச பெருமாள் கோயில்
அருள்மிகு ரேணுகா பரமேஸ்வரி கோயில்
அருள்மிகு தர்மராஜா கோயில்
அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்
அருள்மிகு வரசித்தி விநாயகர் கோயில்
அருள்மிகு கன்னிகா பரமேஸ்வரி கோயில்
அருள்மிகு செல்வவிநாயகர் கோயில்
அருள்மிகு ரெங்கநாதன் சுவாமி கோயில்
அருள்மிகு கச்சாலீஸ்வரர் கோயில்
அருள்மிகு காளிகாம்பாள் கோயில்
அருள்மிகு ஜீவகாருண்யம்மன் கோயில்
அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயில்
அருள்மிகு இலந்தை முத்துமாரியம்மன் கோயில்
அருள்மிகு ராமர் கோயில்
அருள்மிகு அங்காள பரமேஸ்வரி கோயில்

என அனைத்து கோயில்களும் யானைக்கவுனி  பகுதியில்  சுமார் 5 கி.மீ சுற்றளவில் அமைத்துள்ளது.
இத்தகு புண்ணிய பூமியில் நாம் கருணை வடிவில் அருள் புரியும் கச்சாலீஸ்வரர் தரிசனம் பெற்றோம் என்றால் அதற்கு தில்லைக் கூத்தன் தான் காரணம். மல்லீஸ்வரர் கோயிலில் தரிசனம் பெற்று விட்டு, கச்சாலீஸ்வரர் கோயில் சென்றோம். பக்கத்தில் நடந்து செல்லும் தூரம் தான்.



நம்மை வரவேற்ற வெளி கோபுரம் கண்டு கன்னத்தில் போட்டுக் கொண்டோம். பார்ப்பதற்கு ஒன்றும் தெரியாத வண்ணம் இந்த கோபுரம் இருந்தது. கோபுரத்தில் சுவர்களில் ஏகப்பட்ட செய்திகள் காண முடிந்தது.


பிரதோஷ மகிமை பறை சாற்றும் கோபுர வாயில் பகுதி.


திருக்கோயில் சிவாலய வழிபாட்டு முறைகளையும் தொகுத்து தந்திருக்கிறார்கள். இதனை மீண்டும் தனிப் பதிவாக தருகின்றோம்.



அட..நம் சாஸ்தா வழிபாடு பற்றியும் செய்தி சொல்லி இருக்கின்றார்கள்.



அப்படியே கோயில் உள்ளே சென்றோம். இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும். அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.



 கச்சாலீஸ்வரர் தரிசனம் பெற்றோம். என்ன அழகு! கருணை! காருண்யம் ! அருணா! கருணா என உள்ளம் உருகினோம்.


சிவபெருமானைப் பொறுத்தவரை அனைத்துத் திருத்தலங்களிலும், லிங்க ரூபமாகவே காட்சி தருகிறார். ஆனால், இத்திருக்கோயிலில் தான் மூலலிங்கத்தின் பின்புறம், ஐந்து முகங்களுடன் சிவபெருமான், சதாசிவ மூர்த்தியாக, மனோன்மணித் தாயாருடன் காட்சி அளிக்கிறார். இத்திருக்கோயிலில் வேறு எங்கும் காணக் கிடைக்காத காட்சியாக செளந்தரவல்லி நாயகியுடன் அலைமகள் மகாலட்சுமியும், கலைமகள் சரஸ்வதியும் காட்சி அளிக்கின்றனர்.


ஆறுமுகன், அபூர்வமான நவக்கிரக அமைப்பு, துர்க்கை, கால பைரவர் உட்பட பல சன்னதிகள் கொண்ட இத்திருக்கோயிலில் மகாசிவராத்திரி பூஜை பிரபலமானது.


அடுத்த ஆண்டு சிவராத்திரி பூசையில் கலந்து கொள்ள நாம் மனம் திறந்து வேண்டினோம். வேண்டத்தக்கது அறிந்த அவனிடமே வேண்டலா? என்றால் அவன் கடைக்கண் பார்வைக்குத் தானே அன்றி வேறென்ன நமக்கு வேண்டும்?


இதோ உங்களுக்காக பிரதியேகமான தரிசனம்.



திருமணத்தில் தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் வணங்க வேண்டிய தலம்..சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்து வழிபட்டால் திருமணதோஷம் நீங்கும், நினைத்த செயல்கள் நடக்கும், அம்பாளுக்கு தைலக்காப்பு செய்து வணங்கினால் குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை.









பக்தர் ஒருவர், காஞ்சிபுரத்தில் உள்ள கச்சாலீஸ்வரரை வணங்கிவிட்டு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். வழியில் பலத்த மழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. எனவே, அவரால் ஊருக்கு திரும்ப முடியவில்லை. அவருக்கோ ஊரில் பல வேலைகள் பாக்கியிருந்தது. “என்ன செய்வேன் இறைவா!’ என தவித்து நின்றார். ஆனால், மழையோ ஒரு வாரம் விடாப்பிடியாகக் கொட்டிய பின் தான் அடங்கியது. வெள்ளம் வடிய இன்னும் ஒரு வாரம் பிடித்தது.பக்தர் சிவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு வெள்ளம் வடிந்த பின் ஆற்றுக்குள் இறங்கி ஊர் வந்து சேர்ந்தார். என்ன அதிசயம்! அவர் செய்ய வேண்டிய அத்தனை பணிகளும் ஒன்று விடாமல் முடிக்கப்பட்டிருந்தன, தன் பக்தனுக்காக எல்லா வேலைகளையும் இறைவனே பக்தனின் வடிவில் வந்து செய்து முடித்து விட்டார். பின்னர் அவ்வூரில் சிவலிங்க பூஜை செய்தார் பக்தர். காலப்போக்கில் அங்கு கோயிலும் எழுப்பப்பட்டது.



பஞ்சவாகன சிவன்: பாற்கடலை கடைந்தபோது, மத்தாகப் பயன்பட்ட மந்திரமலை கடலில் மூழ்கவே மகாவிஷ்ணு, ஆமை வடிவம் எடுத்து மத்தாக பயன்பட்டார். அவர் வழிபட்ட சிவன் என்பதால், “கச்சபேஸ்வரர்’ என்றும், “கச்சாலீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார். “கச்சபம்’ என்றால் “ஆமை’ என பொருள். இங்குள்ள லிங்கம், கூர்மம் (ஆமை), நாகம், சிம்மம், யுகங்கள், பத்மம் ஆகிய ஐந்து ஆசனங்களின் மீது அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பில் சிவன் காட்சி தருவது அபூர்வம். நாகதோஷம், விஷ ஜந்துக்களால் பயம் கொண்டவர்கள் இவருக்கு அபிஷேகம் செய்து வணங்கலாம். இந்த லிங்கத்திற்கு பின்புறம் கருவறை சுவரில் சதாசிவ மூர்த்தி இருக்கிறார். ஒரே கருவறையில் சிவனின் உருவமான இவ்வடிவையும், அருவுருவமான லிங்கத்தையும் வணங்கிட பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
















அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலத்தில் நவக்கிரகங்கள் தனிமண்டபத்தில் நின்ற வடிவில் உள்ளன. கிரகங்களின் மத்தியில் உள்ள சூரியன், தனது மனைவியர்களான உஷா, பிரத்யுஷா ஆகியோருடன் இருக்கிறார். மண்டப மேற்கூரையில் 12 ராசிகள், 28 நட்சத்திரங்கள், 60 வருடங்கள், நான்கு யுகங்கள், அஷ்டதிக் பாலகர்கள் ஆகியோர் சிற்பவடிவில் உள்ளனர். கிரகதோஷம் உள்ளவர்கள் இங்கு வணங்கினால் அவை நீங்கும். அறுபதாம் திருமணம் செய்பவர்கள் இந்த நவக்கிரகங்கள் முன்பாக திருமணம் செய்கிறார்கள். இவ்வாறு செய்தால் ஆயுள் மேலும் நீடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

கோயில் முழுதும் அழகழகான வண்ண ஓவியங்கள். இவற்றைக் காணவே நமக்கு நேரம் போதவில்லை. தரிசித்து விட்டு வெளியே பிரகாரம் சுற்றலானோம். காணும் இடமெல்லாம் நம்மை வேறெங்கும் சிந்தனை செல்ல விடாது விநாயகர் அகவல், பலன் தரும் பதிகளும், பதிகங்களும் என கண்டோம்.







நாம் தற்போது வரை தரிசித்த கோயில்களில் இங்கு மட்டுமே சுற்று சுவரிலும் ஏகப்பட்ட ஓவியங்கள், செய்திகள் என நம்மை திக்கு முக்காட வைத்து விட்டனர்.






கோசாலை யோடு பிரகாரம் முடிந்தது. மீண்டும் ஒருமுறை கருணை நாயகனிடம் நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து விடைபெற்று சென்றோம்.

- மீண்டும் அடுத்த பதிவில் சிந்திப்போம்.


No comments:

Post a Comment