Friday, March 9, 2018

இன்னா செய்தார்க்கும் இனியவே செய்க

அனைவருக்கும் வணக்கம்.

இன்னும் தீர்த்தமலை யாத்திரைப் பதிவு இருக்கின்றது. தீர்த்தமலைப் பதிவில், தீர்த்த நீராடி காசி விஸ்வநாதர் சன்னதி சென்று வழிபட இருக்கின்றோம். இன்றைய பதிவில் கதை ஒன்றைப் பார்ப்போம். நீதிநெறி ஊட்டும். கதைகள் சொல்ல இன்று பாட்டிமார்களும் இல்லை, சரியான பள்ளிக்கூடங்களும் இல்லை. கல்வியே இன்று சரியாக இல்லாதிருக்கும் போது நாம் என்ன செய்வது? வள்ளலார் காட்டிய சாகாக்கல்வி போன்றவற்றை கையில் நாம் எடுத்தால் தான் நாம் வளம் பெற முடியும். தினசரி நாளிதழ் நம்மை நாள்தோறும் கிழித்துக் கொண்டிருக்கின்றது. சொல்ல முடியாத செய்திகளை தினசரிகளில் நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இது ஒரு புறமிருக்க தொல்லைக்காட்சிகளின் தொல்லைகளோ ...சொல்லி மாளாது. உடனே நாம் ஊடகத்தாரை குறை சொல்ல வேண்டிய அவசியமில்லை. எப்போது நாம் நம்மை சரி செய்ய இருக்கின்றோம்.

உதாரணமாக ஒரு கோவிலுக்கு செல்கின்றோம். காலணிகளை வெளியே விட்டு விட்டு உள்ளே செல்கின்றோம். கோவிலின் வெளியே விட்ட காலணிகள் மனதின் உள்ளே தானே இருக்கின்றது. இந்த நிலையில் கடவுளிடம் எனக்கு அது வேண்டும், இது வேண்டும் என ஏகப்பட்ட வேண்டுதல்கள்.இப்படிப்பட்ட மன நிலையில் எப்படி வேண்டுவது கிடைக்கும். கோவிலுக்குள் இருக்கும் பத்து நிமிடத்தில் காலணிகளைக் கூட நம்மால் மறக்க இயலவில்லை. சரி. கோவிலை விட்டு வெளியே வருகின்றோம். நாம் நினைத்தது நடந்தே விட்டது. காலணிகளை யாரோ மாற்றிக் கூட எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால். நம் மனமோ... அடங்க மறுக்கிறது. என் ஒரு கண் போய்விட்டதா...மற்றவருக்கும் ஒரு கண்ணை போக்குவேன் என அடம்பிடிப்பது எந்த வகையில் நியாயம்? நம் காலணிகளை யாரோ எடுத்துச் சென்று விட்டார்கள். யாரோ காலணி வாங்க முடியாதவர்கள் தான் எடுத்துச் சென்றிருப்பார்கள். நாம் வேறு வாங்கிக் கொள்ளலாம் என்று நினைப்பதை விடுத்து, என் காலணிகளைக் காணோம். அதற்குப் பதிலாக மற்றவரின் காலணிகளை நான் எடுத்துக் கொள்வேன் என செய்வது மகா மகா முட்டாள்தனம். அதுவும் அந்த இறைச்சன்னிதியில் நாம் இப்படி நினைக்கிறோம் என்றால் தினசரி நாமெல்லாம் கோயிலுக்கு சென்றாலும் நாம் திருந்துவே மாட்டோம். பக்தியை புறத்தில் காட்டுவதோடு, அகத்திலும் காட்டப் பழகுங்கள்.இன்று நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் நாம் தான் காரணம். இது போன்றதொரு கதையை இங்கே தருகின்றோம் .

ஏற்கனவே தெரிந்த கதை தான். தெரிந்து என்ன லாபம்? புத்தியில் உரைக்காது அல்லவா உள்ளது.இன்றைய சூழ்நிலையில் வளரும் குழந்தைகள் விட வளர்ந்த குழந்தைகளான நாம் தான் கதையைப் பிடித்து பழக வேண்டும். வாருங்கள் கதை பிடிப்போம்.


ஒரு காட்டில் கொடிய வேடன் வேட்டையாடிக் கொண்டிருந்தான்.அன்றைய தினம் வேட்டையில் சிறு குருவி கூட சிக்கவில்லை. பசியால் வாடி இருந்த சமயத்தில் நல்ல மழை கொட்டோ கொட்டு என பெய்து கொண்டிருந்தது. தன் கையில் இருந்த ஆயுதங்களை விட்டு விட்டான். அப்போது பார்த்து புலி துரத்தியது. வேகமாக ஓடி மரத்தில் ஏறி விட்டான்.புலி அவனைக் கொன்று தின்னும் ஆசையோடு மரத்தின் கீழே இருந்தது. அவன் ஏறிய மரம் பரந்து விரிந்தது. அங்கே இருந்த கரடியைப் பார்த்த உடன் கதிகலங்கிப் போனான்.

கீழே இறங்கினால் புலியிடம், மரத்தின் மேலே என்றால் கரடி என்று அஞ்சிக் கொண்டிருந்த போது, கரடி பேச ஆரம்பித்தது.வேடனே...நீ என்னைக் கண்டு அஞ்ச வேண்டாம். இந்த மரம் நான் வாழும் வீடு. என் வீட்டிற்கு அழையா விருந்தினராக நீ வந்திருக்கின்றாய்.விருந்தினரை ஆதரிப்பது என் கடமை.எனவே நீ இங்கு பயப்படாதிரு என்று சொன்னது.

இதைக் கண்ட புலி, கீழிருந்து...கரடி அண்ணே! நீங்கள் செய்வது மிகப் பெரும் தவறு. நம் விலங்கினங்களைக் கொல்லும் மனிதனுக்கு அடைக்கலம் தரலாமா? அவனைப் பிடித்து கீழே தள்ளிவிடும்....நான் பசியாறிக் கொள்கிறேன் என்றது. உடனேயே  கரடி..புலியே ..நீ சொல்வது சரிதான்,. ஆனால் இப்போது அவன் என் விருந்தாளி ஆயிற்றே..விருந்தாளியை ஆதரிப்பது நம் கடமை என்று சொன்னது.

மாலை நேரத்திலிருந்து இரவு பூக்கத் தொடங்கியது. நடுநிசி இரவில். வேடனுக்கோ கண்கள் தூக்கத்தை நாடியது. உடனே கரடி, வேடனே. அப்படியே உறங்கி கீழே விழுந்து விட்டால் அதோகதி தான்.புலிக்கு நீ உணவாகிவிடுவாய். என் தொடையில் தலை வைத்துத் தூங்கு என்றது.இதைக் கண்ட புலி, கரடி அண்ணே...மீண்டும் மீண்டும் தப்பு செய்கிறீர்கள் .சேரிடமறிந்து சேர வேண்டாமா? இப்போதாவது அவனை கீழே தள்ளி விடுங்கள் என கெஞ்சியது.ஆனால. கரடியோ அவனை கையால் அணைத்துக் கொண்டது. வேடனும் நன்கு தூங்கிவிட்டான்.


வேடன் தூங்கி எழுந்ததும் கரடி தான் தூங்குவதற்கு சென்ற போது..வேடனே..விருந்தாளயான நீர்..பார்த்து பத்திரமாக இரும். கீழே புலி இன்னும் உள்ளது. சற்று நேரத்தில். விடிந்ததும் விடும். விடிந்ததும் நீர். செல்ல நாம் ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி, கரடி தூங்கச் சென்றது. இதைப் பார்த்து புலி, வேடனே..காலை முதல். எனக்கு உணவு கிடைக்கவில்லை. பசி காதை அடைக்கிறது. எனக்குத் தேவை உணவு தான். எப்படியும் உன்னால் கீழே இறங்க முடியாது. பசி போக்க எனக்கு தோசையாய் இருந்தால் என்ன? வடையாக இருந்தால் என்ன? உன்னைத் தின்பதற்குப் பதில் கரடியை தின்று விட்டுப் போகிறேன் என்றது .


சொன்னது தான் தாமதம், உடனே வேடன் கரடியை கீழே தள்ளிவிட்டான். கீழே விழுந்த கரடி மரக்கிளையை லாவகமாக பிடித்து, மீண்டும. வேடனிடம் வந்து சேர்ந்தது. கரடி வேடனைப் பார்த்து நம்பித் தானே படுத்திருந்தேன். மனித இனத்திற்கு உரித்தான புத்தியைக் காட்டி விட்டாய். ஆனால் நான் உன்னைக் கீழே தள்ள மாட்டேன். இன்னா செய்தார்க்கும் இனியவே செய்ய வேண்டும்.நீ செய்த குற்றத்தை நாம் செய்யோம் என்று கூறி , வேடனை பரிவுடன் ஆதரித்தது.

பொழுது விடிந்ததும் புலி அதன் குகைக்குச் சென்றது. வேடனும். தலை கவிழ்ந்தவாறு தன் வீட்டிற்கு வந்தான். தெரிந்த கதைதான். ஆனால் தெரியாத சேதி அல்லவா இந்தக் கதையில் உள்ளது. முடிவு உங்களிடம் ....வேடனாக வாழ்வோமா? கரடியாக வாழ்வோமா?

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌