Friday, March 30, 2018

நால்வரின் பாதையில்... திருப்புகழ் தலங்கள்அனைவருக்கும் வணக்கம்.

இன்றைய பங்குனி உத்திரத்தின்((30/03/2018) சிறப்பு பதிவாக என்ன பதிவாக வழங்கலாம் என்று யோசித்த போது, நமக்கு முருகனே முன்னின்று வந்தார். அதுவும் நால்வரின் பாதையில் மூலமாக. ஆம் ! சென்ற ஜனவரி மாதத்தில் நால்வரின் பாதையில் குழு மூலம் திருப்புகழ் தலங்கள் பற்றிய யாத்திரை அறிவிப்பு கிடைத்தது. நாமும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நால்வரின் பாதையில் திரு.சுரேஷ் பிரியன் அவர்களோடு நட்பு பாராட்டி வருகின்றோம். அவருடைய யாத்திரையில் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கடந்த ஓராண்டுக்கு மேலாக முயற்சித்தோம். எதற்கும் ஒரு நேரம் வேண்டும் அன்றோ? ஆம்,..முருகன் அருள் முன்னிற்க, தொண்டை நாட்டு திருப்புகழ் தலங்கள் யாத்திரையில் பங்கேற்றோம். அதனை இங்கே தொடரும் முன்பாக..திருப்புகழ் தலங்கள் பற்றி சிறு குறிப்பு இதோ. 

சைவத்திற்கு எப்படி நால்வர் பெருமக்களோ, அதே போல் முருகனுக்கு என்றால் அருணகிரிநாதர்.
அருணகிரிநாதர் பாடியருளியவை மொத்தம் 16,000 திருப்புகழ் பாடல்கள். அவற்றுள் நமக்கு இன்று கிடைத்துள்ளவை 1334 பாடல்கள்.

(குறிப்பு: பாடல்களின் எண்ணிக்கை குறித்த சிறு கருத்து பேதங்களும் அறிஞர் பெருமக்களுக்குள் உண்டு. ஒரு சாரார் பாடல்கள் மொத்தம் 1307 என்றும் மற்றொரு தரப்பினர் 1325 என்றும் குறிக்கின்றனர். எனினும் புதிதாகக் கிடைக்கப் பெற்ற சில பாடல்களுடன் சேர்த்து மொத்தம் 1334 பாடல்கள் என்று கொள்வது ஏற்புடையது).

எண்ணற்ற ஆன்றோர்களும் அறிஞர் பெருமக்களும் திருப்புகழ் பாடல்களனைத்தையும் உய்த்து உணர்ந்து அதன் மூலம் 'பாடல் பெற்ற தலங்களையும் அத்தலங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களையும்'  (இயன்ற வரையில்) கண்டறிந்து நமக்கு அறிவித்துள்ளனர்.

அவ்வகையில் நமக்கு கிடைத்துள்ள திருப்புகழ் தலங்கள் மொத்தம் 198. திருப்புகழ் பாடல் பெற்றுள்ள இத்தலங்களுள் 100 தேவாரத் தலங்களும், 2 திருவாசகத் தலங்களும், 2 திருவிசைப்பா தலங்களும் இடம் பெறுவது குறிப்பிடத் தக்கது.

சில தலங்களில் 'தலங்களையே குமாரக் கடவுள் உறையும் திருக்கோயில்களாக' அருணகிரிநாதர் பாடியருளி உள்ளார் (உதாரணம்: ஹரித்வார்). இங்குத் தனிக்கோயில் இல்லை எனினும் தலமே கோயில். (ஆறுமுகக் கடவுளுக்கு எல்லை என்பதும் உளதோ!!!).

இது போன்ற திருப்புகழ் தலங்களில், நால்வரின் பாதையில் குழுவோடு 7 திருப்புகழ் தலங்களும், 1 வைப்பு தலமாக காட்டூர் சிவாலயங்களில் நிறைவாக வழிபாடு செய்து, திருப்புகழ் பாராயணம் செய்து மகிழ்ந்தோம்.

பெரும்பேர்கண்டிகை

ஆச்சர்யம், அனால் உண்மை. கிராமத்தின் பெயர் பெரும்பேற்  கண்டிகை . பெயரை பிரித்து படியுங்கள். பெரும்-பேறு  -கண்டிகை இந்த ஊரில் பிறப்பதற்கு பெரும் பேறு  செய்து இருக்கவேண்டும். உண்மை. ஏன் என்றல்  இந்த சிறிய கிராமத்தில் ஏறக்குறைய 33 கோயில்கள் ஒரு காலத்தில் இருந்தன. அதில் பல  கோயில்கள் சிதிலமாகி இருந்தஇடம் தெரியாமல் மறைந்து போய் இன்று சில கோயில்களே இருக்கின்றன.. இந்த ஊர் அச்சரப்பாக்கத்திலிருந்து ஐந்து  கி.மி. தொலைவில் உள்ளது.  எல்லையம்மன் கோயில் ,  சிவசுப்பிரமணியர் கோயில் , கைலாச நாதர் , அகோர வீரபத்திரர் மற்றும் காளிகாம்பாள் ,ஆஞ்சநேயர் கோயில் ,  கரி வரதராஜ பெருமாள் கோயில், தான்தோன்றீஸ்வரர் கோயில், செல்லியம்மன் கோயில் என பல கோயில்கள் உண்டு.இங்கு நாம் தரிசித்தது சிவசுப்பிரமணியர் கோயில்.
உள்ளே சென்றதும் சித்தர்கள் ஆலயம் என்று இருந்ததை கண்டு நாம் உவகையுற்றோம். நீங்களும் தரிசியுங்கள்.சஞ்சீவி மலை மேல் தெற்கு முகமாக அகத்தியர் முனிவருக்கு 5300 வருடங்களுக்கு முன் காட்சி கொடுத்த இடம். மலை மேல் செல்ல சாலை வசதியும் உள்ளது. அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் மற்றும் 19 புலவர்கள் பாடிய திருக்கோயில். அடிவாரத்தில் சுயம்பு விநாயகரை தரிசித்து மேலே சென்று  நவக்கிரக சன்னதியைக்கடந்து மலைமேல் உள்ள வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணி சுவாமியை தரிசிக்கலாம். மலை அடிவாரத்தில் சஞ்சீவி தீர்த்தம் சகல நோய் நிவாரணியாக விளங்குகிறது. 

முருகனின் அறுபடை வீடுகளபோல் மிகவும் சிறப்புவாய்ந்த இத்தலத்தில் நடைபெறும் உற்சவங்களில் இரட்டைமலை உற்சவம் சிறப்பாக கருதப்படுகிறது. ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி அன்று அருகில் இருக்கும் இரட்டைமலைக்கு முருகன் எழுந்தருளி, அவ்விடத்தில் அச்சரப்பாக்கம் ஸ்ரீ ஆட்சீஸ்வரரை வலம்வந்து காட்சி கொடுப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இது தவிர வைகாசி விசாகத்தில் பிரம்மோத்சவம் நடைபெறுகிறது.

வெறும் வழிபாடு மட்டுமின்றி, அங்கே நாம் திருப்புகழ் படிக்க வைத்து ,அதற்கு விளக்கமும் தருகின்றார் திருப்புகழ் சொற்பொழிவாளர்  சிவத்திரு வேதகிரி ஐயா அவர்கள்


                                        நால்வரின் பாதையில்   சுரேஷ் பிரியன்அடுத்து நாம் சென்றது செய்யூரில் உள்ள ஸ்ரீ கந்தஸ்வாமியார் திருக்கோயில்.

வெளிப் பிராகாரத்தில் இருந்து முன் மண்டபத்திற்குள் நுழைந்ததும், இடப்புறத்தில் சோமநாதர், மீனாட்சியம்மை சன்னதியும், அதன் அருகில் பள்ளியறையும் இருப்பதைக் காணலாம். இச் சன்னதியின் முன் நந்தி தேவர் வீற்றிருக்க இருபுறமும் பிரம்மாவும், விஷ்ணுவும் காட்சியளிக்கின்றனர். கொடி, மரத்துக்கு வடக்கில் அம்மன் சன்னதியும், அதற்கு முன் சர்வ வாத்திய மண்டபமும் அமைந்துள்ளன. துவஜஸ்தம்பத்திற்குப் பின்னால் நவகிரகங்களுக்கு தனி சன்னதி உள்ளது. வெளிப்பிரகாரத்தைச் சுற்றி அமைந்துள்ளன நட்சத்திர வேதாளங்கள்.வேதாளங்களை சிவகணங்களாக செய்யூர் கந்தசுவாமி கோயிலில் காணலாம். வேதாளங்கள் பைரவரின் ஆணைக் குக் கட்டுப்பட்டவை. எனவே ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும், அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு, கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்தால், அக்கோரிக்கைகளை வேதாளங்கள் பைரவர் மூலமாக விரைவாக முருகனிடம் கொண்டு போய்ச் சேர்த்துவிடும் என்பது ஐதிகம். இதனால் பலர் பயனடைந்துள்ளதால், ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியிலும் இக்கோயிலை நாடி வருவோர் அதிகம். தெற்கு, கிழக்கு என இரண்டு நுழைவு வாயில்கள் கொண்டது கோயில். வெளிப்பிராகாரத்தின் கிழக்குப் பகுதியில் பழமையான கல் தீபஸ்தம்பமும், கொடிமரமும் மூலஸ் தானத்தை நோக்கியவாறு காட்சி அளிக்கின்றன. இக்கோயிலின் சிறப்பு, கோஷ்ட தெய்வங்கள் அனைத்தும் சுப்ரமணிய ரூபங்காளாகவே காட்சியளிப்பதாகும். வழக்கமாக சைவ கோயில்களில் விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர் அல்லது விஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், துர்க்கை விளங்குவர். ஆனால், இக்கோயிலில் விநாயகருக்கு பதிலாக நிருத்த ஸ்கந்தரும், தட்சிணாமூர்த்தி கோஷ்டத்தில் பிரம்ம சாஸ்தாவும், விஷ்ணு மாடத்தில் பாலஸ்கந்தரும், பிரம்மாவின் இடத்தில் சிவகுருநாதனும், துர்க்கை இருக்கும் இடத்தில் புலிந்தரும் (வேடர் உருவில் இருக்கும் முருகன்) காட்சியளிக்கின்றனர். மேலும் சிவதலங்களில் காணப்படும் சண்டிகேஸ்வரரும், பைரவரும் இம்முருகன் கோயிலில் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்திருக்கின்றனர். இங்கிருக்கும் சூரியனும் முருகனின் அம்சமாகவே கருதப்பட்டு குகசூரியன் என்று அழைக்கப்படுகிறார். வெளிப்பிரகாரத்தில் பிரதட்சிணமாக வரும்போது முதலில் விநாயகர் சன்னதியும், மூலஸ்தானத்திற்கு வடக்கே நந்தவனமும் காணப்படுகின்றன. தலவிருட்சம் வன்னி மற்றும் கருங்காலி மரங்களாகும். தேய்பிறை அஷ்டமி  அன்று மாலை வேதாள பூஜை விநாயக சங்கல்பத்துடன் தொடங்குகிறது. பிறகு 5 மணிக்கு ஒவ்வொரு நட்சத்திர வேதாளத்திற்கும் செவ்வரளிப்பூக்களால் பூஜையும், மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகமும், இரவு 8 மணிக்கு பைரவருக்கு அஷ்ட புஷ்பார்ச்சனையும் நடைபெறுகின்றது. கோயலுக்கு வெளியே நவகிரகங்கள் பூஜித்த விநாயகர்கள் காணப்படுகிறார்கள். கோயிலிற்கு மேற்கே செட்டிகுளம் என்ற திருக்குளம் உள்ளது. செட்டி என்பது முருகனின் திருநாமங்களுள் ஒன்று.


அடுத்து நாம்  மதுராந்தகத்தில் உள்ள ஆறுமுகசுவாமி திருக்கோயில் சென்றோம். இங்கும் திருப்புகழ் ஓதி வழிபாடு செய்தோம்.மதுராந்தகத்தில் உள்ள ஆறுமுகசுவாமி திருக்கோயில் தரிசனம் முடித்து,புலிப்பரக்கோயில் கிராமம் சென்றோம்.
அங்கே தரிசனம் முடித்து, திருக்கழுக்குன்றம், திருப்போரூர் என ஒரு சுற்று சுற்றினோம். இன்னும் இவை நம் நெஞ்சில் நிறைத்துள்ளன. மீண்டும் ஒரு வாய்ப்பில் மேலும் தொடர்வோம்.
இன்றைய பங்குனி உத்திர நன்னாளில், வீட்டு பூஜையறையில் வள்ளி- தெய்வானை சமேத முருகப்பெருமானின் படத்தை வைத்து, பஞ்சமுக விளக்கேற்றி விரதமிருந்து வழிபாடு செய்ய வேண்டும்.

‘முருகனே! செந்தில் முதல்வனே! மாயோன்
மருகனே, ஈசன்மகனே ஒரு கைமுகன் தம்பியே
நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்!’

என்று முன்னோர்கள் பாடியதைப் போல நாமும் நம்பிக்கையோடு பாடி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடலோடு பதிவை நிறைவு செய்கின்றோம்.

தத்தத்தன தத்தத் தனதன
     தத்தத்தன தத்தத் தனதன
          தத்தத்தன தத்தத் தனதன ...... தனதான

......... பாடல் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த

அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,

சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,

முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,

எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு

சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,

இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,

முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,

பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,

ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,

ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,

பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய

பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,

பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ?

(இப்பாடலின் பிற்பகுதி முருகன் அசுரர்களுடன் செய்த போரினை
விரிவாக வருணிக்கிறது).

தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த

நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி

திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,

கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,

திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**

சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப

தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத
... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,

கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,

களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்

குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ
... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,

நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை

வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,

ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.


மீள்பதிவாக :-

முருகன் அருள் முன்னிற்க! பங்குனி உத்திரம் 2018 - http://tut-temple.blogspot.in/2018/03/2018.html


இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌