Subscribe

BREAKING NEWS

23 March 2018

என்ன செய்யப் போகின்றோம் நாம் ? அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலை!

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யாதவர்கள் தமிழகத்தில் இருப்பது அபூர்வம்தான். தலைநகர் சென்னையையும் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி போன்ற தென்மாவட்டங்களையும் இணைக்கும் மிக முக்கியமான தேசிய நெடுஞ்சாலை இது. இந்த நெடுஞ்சாலையில் பயணம் செய்தவர்கள் சென்னையிலிருந்து சுமார் 95 கி.மீ. தொலைவில் மேல்மருவத்தூரை அடுத்து அச்சிறுபாக்கத்திலுள்ள சிறு மலைத்தொடரையும், அம்மலைத்தொடரின் உச்சியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டடத்தை பார்த்திருப்பீர்கள்.

நாமும் பல முறை சென்று வரும் போது, எப்படியாவது வஜ்ரகிரி மலை செல்ல வேண்டும் என உறுதி பூண்டோம். மலையின் உச்சியில் உள்ள கட்டடம் ஒரு சிவாலயம் என கேள்விப்பட்டதும், நம் வேட்கை இன்னும் அதிகரித்தது. கடந்த இரண்டு மாதங்களில் இரண்டு மூன்று முறை முயற்சித்தும் நம்மால் அங்கு செல்ல முடியவில்லை.



கடந்த வாரம் நமக்கு செல்ல வாய்ப்பு கிடைத்து. வஜ்ரகிரி மலை, சிவாலயம் என மனம் துள்ளி குதித்தது. ஆனால் அங்கு சென்று பார்த்த பின்பு தான் கண்ணில் நீர்த்துளி பெருகியது.
இங்குள்ள சிவாலயம்  1,500 வருட பழமையான சிவாலயம். சரி.வாருங்கள் பயணிப்போம்,




நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது "சிவ சிவ" என்று நம்மை அழைப்பதைப் போல் இருக்கும். மேலே நீங்களே பாருங்கள். 




வஜ்ரகிரி மலை அருகே செல்ல செல்ல மனம் பதைபதைத்தது. மேலே உள்ள கோயிலில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் சொன்னார்கள். நெடுஞ்சாலையில் உள்ள பள்ளியின் அருகே கோயிலுக்கு செல்ல மலைப்பாதை இருந்தது. அங்கிருந்து நடக்கும் தொலைவில் தான். கோயில் அடிவாரம் அடைந்தது விட்டோம். ஆள் அரவமற்ற இடம், மலைப் பாதை. நமக்கு புது அனுபவத்தை தரும் என்று நம்பினோம்.



மலை ஏற ஆரம்பிக்கும் முன்னர், அங்கே ஒரு சிறிய விளக்கு மேடையும், மரமும் இருந்தது. நல்ல வேளை , .பையில் நெய் வைத்து இருந்தோம்.அங்கே இருந்த அகல் விளக்கை சுத்தம் செய்து விட்டு, நெய் ஊற்றி, விளக்கேற்றி அப்படியே அங்கு சிறிது நேரம் அமர்ந்தோம். சுமார் 10 நிமிடம் கழித்து மலை ஏற ஆரம்பித்தோம். 





அச்சிறுபாக்கத்திற்கு அழகூட்டுவதோடு சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தினசரி பயணிக்கும் லட்சக்கணக்கான பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கும் இந்த அழகிய மலைத்தொடரின் பெயர் வஜ்ரகிரி மலை. 






அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி 
என மனம் விட்டு ஓதினோம். 



அடிவாரத்தில் மனம் மகிழ்வுற, அப்படியே மலை ஏறினோம்.




சிறிய மலையைப் போல் தான் இருந்தது. 








அப்படியே மலை ஏற்றத்தை தொடர்ந்தோம். சுமார் 15 நிமிட இடைவெளி இருக்கும். அப்பாடா.மலை உச்சிக்கு வந்துவிட்டோம் என்று தோன்றியது.



மேலே செல்ல செல்ல மனம் சற்று லேசானது. ஏதோ மனதில் உள்ள பாரம் குறைந்தது போல் இருந்தது.



தூரத்தில் இருந்து பார்த்த சந்நிதி இப்பொது தெளிவாக இருந்தது. அங்கிருந்து அப்படியே வலப்புறம் திரும்பினோம். சரியாக தேய்பிறை அஷ்டமி முடிந்த சமயம் ஆதலால் பைரவர் தரிசனம் கிடைத்தது. பைரவரைக் கண்டதும் நமக்குத் தெரிந்த சில பைரவர் மந்திரங்களை உதடுகள் முணுமுணுத்தது.



தரிசித்து விட்டு, மீண்டும் இடப்புறம் திரும்பி நடக்கலானோம். இதற்கு முன்பு வரை படிக்கட்டுகள் நன்றாக, நடப்பதற்கு இலகுவாக இருக்கின்றது. இதற்கு அடுத்துதான் வெறும் கல் மட்டும் பதித்த நிலையில் பாதை இருந்தது. வினை தீர்க்கும் விநாயகரை தரிசித்தோம்.






இதோ வெறும் கற்கள் கொண்ட பாதை, சரியாக கால் வைத்து நடக்க வேண்டும். இங்கிருந்து நாம் பெருமான் சந்நிதியைத் தேடிக் கொண்டே நடந்தோம்.


கண்டேன் சீதையை என்று ஸ்ரீ ஆஞ்சநேயர் உரைத்தது போல், கண்டேன் சிவாலயத்தை என்று நாம் உரைத்தோம். சுமார் 1500 வருட பழைமையான சிவாலயமா இது? என்று கண்ணீர் வடித்தோம்.

இந்த வஜ்ரகிரி மலை உச்சியில் சுமார் 1,500 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட பசுபதீஸ்வரர் உடனுறை மரகதாம்பிகை ஆலயம்தான், இப்போது பாழடைந்த கட்டடம்போல் காட்சி தருகிறது.
தரையிலிருந்து சுமார் 700 அடி உயரத்தில் மலை உச்சியில் இருக்கும் பசுபதீஸ்வரர் கோயிலுக்கு நேராக, அச்சிறுபாக்கம் ஊருக்குள் மிக அழகிய உயர்ந்த கோபுரத்தோடு அமைக்கப்பட்டிருக்கிறது ஆட்சீஸ்வரர் கோயில். இந்த ஆட்சீஸ்வரர் கோயிலுக்கு உட்பட்டதுதான் பசுபதீஸ்வரர் கோயிலும் என்கிறார்கள் அவ்வூரைச் சேர்ந்த பெரியவர்கள். பசுபதீஸ்வரர் கோயிலை அடைய இரண்டு வழிகளை பல நூறு வருடங்களுக்கு முன்பே முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ளனர். ஒன்று செங்குத்தான படிக்கட்டுகள் மூலம் மலை உச்சியை அடைவது. மற்றொன்று மலைக்குப் பின்புறம் வாகனங்களில் வருவதற்கான பாதை.

1967-ல் இம்மலையில் தங்கியிருந்த திருநெல்வேலியைச் சேர்ந்த மௌனசித்த ராஜா என்பவர் மலை உச்சிக்கு மின் இணைப்பு பெற்றிருந்தார். ஆனாலும் மலை உச்சிக்குச் செல்லும் பாதை, விளக்குகள் இல்லாமல் இருளில் மூழ்கியிருந்தது. இளைஞர்கள் கோயிலை செப்பனிட்டதோடு சில நன்கொடையாளர்கள் உதவியுடன் மலைப்பாதையில் மின்விளக்குகளை அமைத்தனர். `சிவசிவ' என்ற எழுத்துக்கள் மின்னும் மின்சார போர்டையும் மலை உச்சியில் அமைத்தனர். சில படிக்கட்டுகளைப் புதிதாகக் கட்டினர். மலையில் புதிதாக போர்வெல் போடத் தீர்மானித்து தண்ணீர்த் தொட்டிகளைக்கூட கட்டிவிட்டனர். ஆனால் நாம் நினைப்பது நடந்து விடுமா என்ன? அனைத்து திருப்பணிகளும் அப்படியே நின்று விட்டன.

எப்போ அவன் அருள் கிடைக்குமோ? என்ன செய்யப் போகின்றோம் நாம்?








திருக்கோயிலின் சுவர்களை காணும் போது, நம் நெஞ்சே உருகி போனது. கோபுரம் தான் நம் தலைவருக்கு அழகு. அதுவும் இல்லை, வண்ணப் பூச்சும் இல்லை. கோயிலின் பின்புறம் வஜ்ரகிரி மலையின் அடர்ந்த மூலிகை வனம் உள்ளது. சிறிது நேரம் அமர்ந்து, இங்கே நாம் உழவாரப் பணி செய்ய அருள் வேண்டினோம். நேரம் காலம் கூடி வந்தால், கண்டிப்பாக அவர் நம்மை அழைப்பார் என்ற நம்பிக்கை பிறந்தது.






இயற்கை அழகை தரிசித்து விட்டு அப்படியே கீழே இறங்கினோம். இறங்கும் போது நம் மனதில் ஒரு பாரம் ஏறிக் கொண்டது. வேறென்ன? எப்போ அழைப்பீரோ? என்பது தான்.





கீழே இறங்கி வந்து பார்த்த போதும், நாம் ஏற்றி வைத்த ஜோதி, இன்னும் பிரகாசித்துக் கொண்டே இருந்தது. இதுவே நமக்கு கிடைத்த உத்தரவாக எண்ணி உள்ளோம். வாய்ப்புள்ள போது இங்கே உழவாரமும், படி பூசையும் செய்ய திட்டமிட்டுளோம். அதற்கு முன்பாக நமக்கு ஒரு தித்திப்பான செய்தி கிடைத்துள்ளது. ஆம். வரும் பௌர்ணமி 31/3/2018 அன்று இங்கே கிரிவலம் செல்ல இருக்கின்றார்கள்.வாய்ப்புள்ள அன்பர்கள் கலந்து கொண்டு சிவனருள் பெறும்படி கேட்டுக் கொள்கின்றோம்.


தற்போது மேலும் சில தகவல்கள் கிடைக்கப் பெற்றது. அவற்றையும் இணைத்துள்ளோம். வாய்ப்புள்ள அன்பர்கள் அச்சிறுபாக்கம் வஜ்ரகிரி மலையில் கிரிவலம் செல்லுங்கள்.






- மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment