Subscribe

BREAKING NEWS

15 March 2018

அகத்தைத் திருத்தும் வெள்ளியங்கிரி


அனைவருக்கும் வணக்கம்.

நம் தளத்தில் ஏற்கனவே வெள்ளிங்கிரி பற்றி தொடர்பதிவாக வெளியிட்டு உள்ளோம்.இதோ மீண்டும் வெள்ளிங்கிரி பற்றி இங்கே பேசப் போகின்றோம். அவன் அருளாலே அவன் தாள் வணங்கி அவன் அருளை அவனைப் பற்றி பேசுவது என்றால் நமக்கு எந்நாளும் இன்பமே அன்றி வேறில்லை.
சென்ற ஆண்டில் சென்று வந்த அனுபவமே இன்னும் மனதுள் ஒளிர்விட்டுக் கொண்டு இருக்கின்றது. எந்த ஒரு யாத்திரையும் நாம் செல்ல வேண்டும் என்று முடிவு செய்துவிட்டாலே 90% நாம் சென்ற மாதிரி தான். மீதம் உள்ள 10% தான் நாம் மீண்டும் செல்லும் பயணம். இது நம்மைப் பொறுத்தவரையில் நாம் உணர்ந்து வருகின்றோம்.

இந்த ஓராண்டு காலத்தில் நம் அகத்தை அந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் துவைத்து எடுத்து விட்டார் என்பதே உண்மை. எத்துணை முறை துவைத்தாலும் மனதில் அழுக்கு சேர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனால் தான் மீண்டும் மீண்டும் அவனைக் காண சென்று கொண்டிருக்கின்றோம். சென்ற ஆண்டு வெள்ளியங்கிரி மலை ஏற்றம் செய்த போது, அகத்தியர் வனம் மலேஷியா குழுவின் கூட்டுப் பிரார்த்தனை பற்றி அறிவிப்பு செய்து இருந்தோம். ஆனால் இன்று நம்மை அவர்கள் இங்கு சேவை செய்ய தேர்ந்து எடுத்து உள்ளார்கள் என்றால் அது இந்த
வெள்ளியங்கிரி ஆண்டவரின் கட்டளை.

இன்று நாம் இந்த பதிவு பற்றி பேசுவதும் அவன் அருளாலே தான். அதனை வேறொரு பதிவில் விரித்து உரைக்கின்றோம்.

சரி. வாருங்கள் அருளை அள்ளிப் பருகுவோம்.

வெள்ளியங்கிரி மலை என்றவுடன் அதன் பசுமையும் தெய்வீக அதிர்வுகளும் உடனே நினைவுக்கு வரும்! ஆனால், அங்குள்ள 7 மலைகளிலும் உள்ள தெய்வீக இடங்களும், வரலாற்று சிறப்புகளும் என்னென்ன என்பதை பலரும் அறிந்திருப்பதில்லை. வெள்ளியங்கிரி பற்றிய அரிய தகவல்கள் பலவற்றைக்கொண்டு ஒரு முழுமையான தொகுப்பாக இப்பதிவு அமைகிறது!




‘தென்னாடுடைய சிவனே போற்றி!’ என்று போற்றப்படும் சிவனுக்கு, தென்னாட்டில் உள்ள கயிலைதான், ‘தென் கயிலை’ என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை! இயற்கையின் பேருருவில் இறைவனைக் காணுகிற மரபு நம்முடையது.

வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம். ஞானிகளும் சித்தர்களும், ஸ்தூல வடிவிலும் சூட்சுமவடிவிலும் நடமாடுகிற புனிதமிக்க மலை வெள்ளியங்கிரி. இதில் பயணம்செய்வது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம்! ஏழு மலைகளைக்கொண்டது வெள்ளியங்கிரி. இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து ஈடுபடுகிற மலை, வெள்ளியங்கிரி. இந்த ஏழு மலைகளும் மனித உடலில் சூட்சுமமாக உள்ள ஏழுசக்கரங்களின் குறியீடு. பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் மலையேற வருகிற பக்தர்களும் உண்டு. முன்பெல்லாம் கைகால்களால் தவழ்ந்து ஏறி வந்த இந்த மலையில் இப்போது படிக்கட்டுகள் வந்துவிட்டன. முதல் மலை செங்குத்தான பாதைகொண்டது. ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டிவரும். இந்த மலைப் பாதையின் ஆரம்பத்தை ஆன்மிகப் பாதையின் ஆரம்பத்துக்கு நாம் ஒப்பிடலாம். ஆன்மிகப் பயிற்சிகளைப் பின்பற்றுவது எப்படி ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்குமோ, அது போல முதல் மலை ஏறுவது சற்றே சிரமமாக இருக்கும். முதல் மலையைத் தாண்டி வருபவர்களை வரவேற்க, விநாயகப்பெருமான் காத்திருக்கிறார்.

பயணம் பழகிவிட, சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. வழுக்குப் பாறை வந்தவுடனேயே இரண்டாவது மலை முடிந்துவிட்டதை பக்தர்கள் புரிந்துகொள்கிறார்கள்.
மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு ‘கைதட்டிச்சுனை’ என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர்.

மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு ‘பாம்பாட்டிச்சுனை’ என்று பெயர். பாம்பாட்டிச் சித்தர் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவதென்னவோ, மருதமலைதான். அந்தப் பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலேயும் வசித்திருக்கக்கூடும். குண்டலினி சக்தியின் குறியீடாக பாம்பு இருப்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும். மனிதர்களின் குண்டலினி ஆற்றலை ஆட்டுவிக்கிற வல்லமை சித்தர்களுக்கு இருப்பதாலேயே பாம்பாட்டிச் சித்தர் என்பது ஒரு முக்கியமான சொல்லாக விளங்குகிறது.

நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது. இது மண் மலையாக இருக்கிறது. ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கிறது. இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அடைந்திருக்கிறார். எனவே, ‘ஒட்டர் சமாதி’ என்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.
ஐந்தாம் மலைக்கு ‘பீமன் களியுருண்டை மலை’ என்று பெயர் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் ‘அர்ச்சுனன் தலைப் பாறை’ போன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு. ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது. இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 – 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்கே பாயக்கூடிய சுனை ‘ஆண்டிசுனை’. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை. எனவே, இவற்றுக்கு ‘திருநீற்றுமலை’ என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.

‘சுவாமி முடி மலை’ என்று பெயர்கொண்ட ஏழாவது மலை மேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும் சவாலுமானது. இதில், பெரும் பாறைகள் மூன்றும் சேர்ந்து இயற்கையாகவே தோரணம்போல் அமைந்திருக்கும் அரிய காட்சி கண்களுக்கு விருந்தாகிறது. இதைத் ‘தோரண வாயில்’ என்று அழைக்கிறார்கள். ஏழாவது மலையில் இருக்கிற சுயம்புலிங்கம் அனைவராலும் வழிபடப்படுகிற வெள்ளியங்கிரி ஈசன்.
மலையேறி வந்த களைப்பும் நாம்தானா ஏறி வந்தது என்கிற மலைப்பும் பறந்து போகும்விதமாய் அடர்ந்த வனங்களின் மடியில் உயர்ந்த மலைகளின் நடுவில் யுகம்யுகமாய் கோயில்கொண்டு இருக்கிறார் வெள்ளியங்கிரி ஈசர். கரிகால சோழனிடம் சமய முதலிகள் ‘வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!’ என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன. ஏழாவது மலை அருகில் சத்குரு ஸ்ரீ பிரம்மா தன்னுடலை உதறிய இடமும், அதற்கு முன்னர் ஏறக்குறைய இரண்டு மாத காலம் அவர் வாழ்ந்த குகையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. மிக அற்புதமான தியான அதிர்வுகள் கொண்ட இந்த இடங்களில் ஈஷா தியான அன்பர்கள் குழுக்களாகச் சென்று தியானம் செய்வது உண்டு. அளவு கடந்த தீவிரத்தோடு ஆத்ம சாதனைகளை சத்குரு ஸ்ரீ பிரம்மா மேற்கொண்ட இந்தப் பகுதிகள், குரு பக்திக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும், அசாத்தியமான லட்சியப் பிடிப்புக்கும் மௌன சாட்சிகளாய், மகத்தான சாட்சிகளாய் விளங்குகின்றன.

வெள்ளியங்கிரி மலை, இறைமையின் மகத்துவத்துக்கு மட்டுமின்றி இயற்கையின் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிற மேன்மையான தலம். பற்பல சுனைகளும் சிற்றருவிகளும் உருவெடுக்கும் வெள்ளியங்கிரி மலையில் மூங்கில், தேக்கு, சோதிப் புல், சோதிக்காய், மிளகு, திப்பிலி, உதிரவேங்கை, வசுவாசி, வாடா மஞ்சள், காட்டுப்பூ, சிவப்புக் கற்றாழை, கற்பூரவல்லி, ரத்தசூரி, ஏறு சிங்கை, இறங்கு சிங்கை, சோழைக் கிழங்கு, கருங்கொடிக் கிழங்கு உள்ளிட்ட பல்வேறு அரிய தாவரங்களும் மூலிகைகளும் கிடைப்பதாக சித்த மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மலைகள் பொதுவாகவே மகிமை மிக்கவை. சித்தர்கள், யோகிகள் மற்றும் அருளாளர்கள் பன்னெடுங்காலம் தங்கியிருந்து தவம்புரிந்து தெய்வீகத்தை உணர்ந்த தலம், வெள்ளியங்கிரி. அவர்கள் தெய்வீகத்தை உணர்ந்ததோடு நில்லாமல், அதனை உணர்த்தும் விதமான அதிர்வுகளையும் நிரப்பியிருக்கிற மலை வெள்ளியங்கிரி. மண்ணுலகம் சிறக்கவும் அருள் நெறியில் ஈடுபட்டு மக்கள் தங்களை உணரவும் வேண்டிய வழிகாட்டுதல்களை வழங்குகிற அருட்களஞ்சியமாய், பேரருளின் பிரம்மாண்டமாய், தென் கயிலாயமாய் நிமிர்ந்து நிற்கும் வெள்ளியங்கிரி மலை தெய்வீகத்தின் உறைவிடம், ஞானத்தின் நிறைகுடம்!













பூமியின் வடக்கு பாகத்தில், சூரியன் பயணிக்கும் 6 மாத காலகட்டத்தை உத்தராயணம் என்று குறிப்பிடுகிறோம். அருளையும் ஞானத்தையும் உள்வாங்கிக் கொள்வதற்கு இது மிகச் சரியான நேரம். அதிலும் குறிப்பாக உத்தராயணத்தின் முதல் பாதி அதாவது மார்ச் மாதம் முடியும் வரை அதிகபட்சமான அருளைப் பெறுவதற்கு மிகச் சிறப்பான நேரம். அதாவது ஒவ்வொரு வருடம் சிவராத்திரி முதல் சித்ரா பௌர்ணமி வரை அனுமதி உண்டு.

மீள்பதிவாக :-

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_4.html

சரணம் சரணம் சண்முகா சரணம்! - கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வின் துளிகள் - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_12.html



இப்பிறப்பில் உன்னைக் காண்கின்றோம் - வெள்ளியங்கிரி ஈசா !  - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_51.html

வெள்ளியங்கிரி ஈசன் தரிசனம் கிடைக்குமா? - http://tut-temple.blogspot.in/2017/07/blog-post_3.html

வெள்ளியங்கிரி ஈசனே! நீயே துணை - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_28.html

இன்பத்தை அள்ளித்தரும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_15.html

பாவம் தீர்க்கும் வெள்ளியங்கிரி - தொடர்ச்சி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_19.html

மனதை வெளுக்கும் வெள்ளியங்கிரி - http://tut-temple.blogspot.in/2017/06/blog-post_13.html


No comments:

Post a Comment