Subscribe

BREAKING NEWS

10 March 2018

கயிலையே மயிலை....மயிலையே கயிலை....பங்குனிப் பெருவிழா அழைப்பிதழ்


கயிலையே மயிலை மயிலையே கயிலை


முன்னர் திருமயிலை எனப் பெயர்பெற்றிருந்த சிவத்தலமே தற்போதைய சென்னை மாநகரின் பகுதியாக உள்ள மயிலாப்பூர். அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவரான வாயிலார் என்னும் அடியார் வாழ்ந்த தலம் இது. சுந்தரர்  திருத்தொண்டர்த்  தொகையில் ‘துறைக்கொண்ட செம்பவளம் இருளகற்றும் சோதித் தென்மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்’ என்று இந்த அடியாரைப் போற்றும் போது, இத்தலத்தைக் குறிப்பிட்டிருப்பதிலிருந்து இதன் ’ தொன்மை’ யைத் தெரிந்துகொள்ளலாம்.

மயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூர், தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் உள்ள ஒரு இடமாகும். இது வரலாற்றுச் சிறப்பு மிக்க இடமாகும்.இங்கு கபாலீஸ்வரர் கோயில், ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், ஆதி கேசவப் பெருமாள் கோயில், மாதவப் பெருமாள் கோயில், மற்றும் கடலோரம் அமைந்துள்ள சாந்தோம் சர்ச் ஆகிய பெற்ற கோயில்கள் உள்ளன.திருவள்ளுவர் இங்கு வாழ்ந்தார் என்று ஒரு கருத்து உள்ளது. இவருக்கும் இங்கு ஒரு கோயில் உண்டு.



சென்னை மாநகரம் தோன்றுவதற்குப் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மயிலாப்பூர் ஒரு கடலோர நகரமாகப் பெயர் பெற்றிருந்தது. தொலமியின் நூலில் இது மைலார்பொன் (Mylarphon) எனக் குறிப்பிடப்பட்டு, இது வளம் மிக்கதும் முக்கியத்துவம் கொண்டதுமானதுமான ஒரு இடம் எனக் கூறப்பட்டுள்ளது. பல்லவர் காலத்தில் இது ஒரு சிறப்புப் பெற்ற துறைமுகமாகவும் விளங்கியது. 16 ஆம் நூற்றாண்டில் இப்பகுதியில் போத்துக்கீசர் ஆதிக்கம் ஏற்பட்டபோது, இவ்விடத்தில் அவர்களுக்கான குடியேற்றம் ஒன்றை நிறுவ விரும்பினார்கள். இதனால், மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உள் நோக்கி இன்றைய இடத்துக்கு நகர்த்தினார்கள்.



இப்பகுதியில் நீண்டகாலமாகவே இந்து சமயத்தின் சைவம் மற்றும் வைணவப் பிரிவுகள் சிறப்புற்று விளங்கின. பண்டைக்காலக் கரையோர மைலாப்பூரில் சிவனுக்குப் பெரிய கோயில் ஒன்று இருந்ததற்கான சான்றாக 1250 ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டொன்று, இன்றைய கபாலீஸ்வரர் கோயிலில் இருப்பதாகக் கூறப்படுகிறது. போத்துக்கீசர் இக்கோயிலை அழித்துவிட்டனர். இன்றைய கபாலீஸ்வரர் கோயில் 16 ஆம், 17 ஆம் நூற்றாண்டுகளை அண்டிக் கட்டப்பட்டதாகும்.

திருமயிலாப்பூர் - கபாலீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். வாயிலார் நாயனார் அவதரித்த தலமாகும். சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது மற்றும் அம்பாள் மயில் வடிவங் கொண்டு வழிபட்டது ஆகியன இத்தலத்தில் நிகழ்ந்தன என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).



மயிலாப்பூரில் சப்த சிவாலயங்கள் அமைந்துள்ளன. இவற்றை ஒரே நாளில் மூன்று மணி நேரத்தில் தரிசிக்கலாம் என்கிறார்கள். இந்தத் தலங்கள் ஒன்றுக்கொன்று அருகாமயில் அமைந்துள்ளன. இத்தலங்களை கீழ்கண்ட வரிசைப்படி தரிக்க வேண்டும் என்கிறார்கள்.

    மயிலாப்பூர் காரணீசுவரர் கோயில்
    திருவல்லிக்கேணி தீர்த்தபாலீசுவரர் கோயில்
    மயிலாப்பூர் வெள்ளீசுவரர் கோயில்
    மயிலாப்பூர் விருபாக்சீசுவரர் கோயில்
    மயிலாப்பூர் வாலீசுவரர் கோயில்
    மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில்
    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

இந்த சப்த சிவாலயங்களை சப்த ரிசிகளான விசுவாமித்திரர், காசிபர், வசிஷ்டர், கௌதமர், அகத்தியர், அத்ரி, பிருகு ஆகியோர் வழிபட்டுள்ளனர்.


இத்தகு சிறப்புமிகு மயிலையில் பங்குனிப் பெருவிழா மார்ச் 22 முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நாம் மயிலை அறுபத்து மூவர் திருவிழா பற்றி அறிந்தோம். ஆனால் நமக்கு திருவருள் கிடைக்கவில்லை. சென்ற ஆண்டு அறுபத்து மூவர் சென்று தரிசித்தோம். சென்னையில் ஒரு பிரம்மாண்டம்  என்றால் அது அறுபத்து மூவர் விழா ஆகும். இங்கு கொடுப்பதும்,பெறுவதும் சிறப்பாக இலங்கும்.

இதோ இந்த ஆண்டு நாம் செய்த புண்ணியமே நமக்கு அழைப்பிதழ் கிடைத்துள்ளது.இதனால் ஊரறிய செய்ய வேண்டி இங்கே பகிர்கின்றோம். வாய்ப்புள்ள அன்பர்கள் பங்குனிப் பெருவிழாவில் கலந்து கொண்டு இறையருள் பெறுங்கள்.








கயிலையே மயிலை, மயிலையே கயிலை எனப்போற்றப்படும் இத்தலத்தில்  வசித்த வணிகப் பெருமகனாகிய சிவநேசர் என்ற அடியாரின் செல்லப் புதல்வி, நந்தவனத்தில்  பூக்கொய்கையில் அரவம் தீண்டி மாண்டாள். மகளின் மீது கொண்ட பேரன்பினால் அவளது அஸ்தியை ஒருமட்குடத்தில் வைத்துப் பாதுகாத்துவந்தார் சிவநேசர். தல யாத்திரையின் பொருட்டு இப்பதிக்கு வந்த திருஞானசம்பந்தரிடம் சிவநேசர் தன் துயர்கூறி முறையிட்ட்தால் மனமிரங்கிய அவர்

மட்டிட்ட புன்னையங்கானல் மடமயிலைக் கட்டிட்டங்
கொண்டான் கபாலீசரம் அமர்ந்தான் ஒட்டிட்ட
பண்பின் உருத்திரப் பல்கணத்தார்க்கு அட்டிட்டல்
காணாதே போதியொ பூம்பாவாய்......

என்று தொடங்கும் பதிகங்கள் பாடி இறைவனைத் துதித்தார்.

 பூம்பாவாய்! தேன்பொருந்திய அழகிய. புன்னை மரச்சோலைகள் சூழ்ந்ததும், இளமயில்கள் ஆரவாரிப்பதுமான ஊரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் விருப்பத்தோடு அமர்ந்தவன் மீது நெருக்கமான அன்புடைய மாகேசுரர்களுக்குத் திருவிழாக்காலங்களில் அன்பர்கள் அமுது செய்விக்கும் காட்சிகளைக் காணாது செல்வது முறையோ?                

மண்பானையில் அஸ்தியாக இருந்த பூம்பாவை இறைவனருளால். உயிர்த்தெழுந்தாள். அந்நிகழ்ச்சி இத்தலத்தில் ந்டைபெறும் பங்குனிப் பெருவிழாவின் ஒரு பகுதியாக கொண்டாடப்படுகிறது.




மைப்பயந்த வொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பயந்த நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
ஐப்பசி யோண விழாவு மருந்தவர்கள்
துய்ப்பனவுங் காணாதே போதியோ பூம்பாவாய்.

பூம்பாவாய்! மைபூசப்பெற்ற ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் திருமயிலையில் கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைமேல் பயன்தரும் திருநீற்றை அணிந்தவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு நிகழ்த்தும் ஐப்பசி ஓண விழாவையும் அருந்தவமுனிவர் அமுதுண்ணும் காட்சிகளையும் காணாது செல்வது முறையோ?     





வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த இளமகளிர் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள மாமயிலையில் விளங்கும், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானைக் கார்த்திகைத் திங்களில் நிகழும் விழாக்களின்போது சாந்தணிந்த இளநகில்களைக் கொண்ட மகளிர் திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
     



ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.



பூம்பாவாய்! ஊர்ந்து வரும் அலைகள் வந்து உலாவும் கடலை அடுத்துள்ள உயர்ந்த மயிலாப்பூரில், கூரிய வேலால் மீன்களைக் கொல்வதில் வெற்றிகாணும் நெய்தற்சேரியில் மழைவளம் தந்ததால் வளர்ந்த சோலைகள் சூழ்ந்த கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் பெருமானுக்குத் திருவாதிரை நாளில் நிகழ்த்தும் விழாவைக் காணாது செல்வது முறையோ?



மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.



பூம்பாவாய்! மைபூசிய ஒளிநிறைந்த கண்களை உடைய இளமகளிர் வாழும் சிறந்த மயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர் நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ?


மடலார்ந்த தெங்கின் மயிலையார் மாசிக்
கடலாட்டுக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
அடலானே றூரு மடிக ளடிபரவி
நடமாடல் காணாதே போதியோ பூம்பாவாய்.



பூம்பாவாய்! மடல்கள் நிறைந்த தென்னைமரங்கள் மிகுந்த மயிலாப்பூரில் மாசிமகநாளில் கடலாட்டுக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளியிருப்பவனும், வலிமை பொருந்திய ஆனேற்றில் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?




மலிவிழா வீதி மடநல்லார் மாமயிலைக்
கலிவிழாக் கண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
பலிவிழாப் பாடல்செய் பங்குனி யுத்தரநாள்
ஒலிவிழாக் காணாதே போதியோ பூம்பாவாய்.


பூம்பாவாய்! இளம் பெண்கள் வாழும் விழாக்கள் நிறைந்த வீதிகளைக் கொண்ட பெரிய மயிலையில் எழுச்சியை விளைவிக்கும் திருவிழாக்களைக் கண்டு அங்குள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் அமர்ந்தானது பலி அளிக்கும் விழாவாகப் பங்குனி உத்தரநாளில் நிகழும் ஆரவாரமான விழாவைக்காணாது செல்வது முறையோ?



தண்ணா வரக்கன்றோள் சாய்த்துகந்த தாளினான்
கண்ணார் மயிலைக் கபாலீச் சரமமர்ந்தான்
பண்ணார் பதினெண் கணங்கடம் மட்டமிநாள்
கண்ணாரக் காணாதே போதியோ பூம்பாவாய்.



பூம்பாவாய்! வெம்மையான இயல்புடைய இராவணனின் தோள்களை நெரித்துகந்த திருவடிகளை உடையவனாய், கண்களுக்கு நிறைவு தரும் மயிலையில் உள்ள கபாலீச்சரத்தில் அமர்ந்துள்ளவனுக்கு, பண்ணோடு பாடும் பதினெண் கணத்தினரும் ஏத்தும் வகையில் சித்திரை அட்டமியில் நிகழும் விழாவைக் கண்ணாரக் கண்டுமகிழாது செல்வது முறையோ?



நற்றா மரைமலர்மே னான்முகனு நாரணனும்
முற்றாங் குணர்கிலா மூர்த்தி திருவடியைக்
கற்றார்க ளேத்துங் கபாலீச் சரமமர்ந்தான்
பொற்றாப்புக் காணாதே போதியோ பூம்பாவாய்.



பூம்பாவாய்! நல்ல தாமரைமலர் மேல் உறையும் நான்முகனும் திருமாலும் முழுவதும் அறியாதவாறு அழலுருவாய் ஓங்கிய, மூர்த்தி தன் திருவடிகளைக் கற்றவர்பரவக் கபாலீச்சரம் அமர்ந்து உறைவோன். அப்பெருமானுக்கு நிகழும் ஊஞ்சலாட்டுத் திருவிழாவைக் காணாது செல்லல் முறையோ?


உரிஞ்சாய வாழ்க்கை யமணுடையைப் போர்க்கும்
இருஞ்சாக் கியர்க ளெடுத்துரைப்ப நாட்டில்
கருஞ்சோலை சூழ்ந்த கபாலீச் சரத்தான்றன்
பெருஞ்சாந்தி காணாதே போதியோ பூம்பாவாய்.



பூம்பாவாய்! உடை ஒழிந்தவராய் வாழும் சமணர், உடையைப் போர்த்துத் திரியும் கரிய சாக்கியர் தம் வாய்க்கு வந்தவாறு பிதற்ற மண்ணுலகில் கரிய சோலை சூழ்ந்த கபாலீச்சரத்தானுக்கு நிகழும் நல்ல பெருஞ்சாந்தி விழாவைக் காணாது செல்வது முறையோ?


கானமர் சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
தேனமர் பூம்பாவைப் பாட்டாகச் செந்தமிழான்
ஞானசம் பந்த னலம்புகழ்ந்த பத்தும்வல்லார்
வானசம் பந்தத் தவரோடும் வாழ்வாரே.



மணம் பொருந்திய சோலைகள் சூழ்ந்த மயிலையில் விளங்கும் கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளிய இறைவன்மீது, தேன் பொருந்திய பூவில் உறையும் பாவையை விளிக்கும் பாட்டாகச் செந்தமிழால் ஞானசம்பந்தன் இறைவனது நலம்புகழ்ந்து பாடிய இப்பத்துப்பாடல்களையும் ஓதவல்லவர் வீடுபெற்ற சிவகணத்தவரோடு கூடி நிலைத்து வாழ்வர்.


மண்ணி னிற்பிறந்தார்பெறும் பயன்மதி சூடும்
அண்ண லாரடி யார்தமை யமுதுசெய் வித்தல்
கண்ணி னாலவர் நல்விழாப் பொலிவுகண் டார்தல்
உண்மை யாமெனி லுலகர்முன் வருகென வுரைப்பார்

ஆக, இந்த மண்ணில் பிறந்தார் பெறும் பயன் ஈசனடியார்களுக்கு அமுது செய்வித்தல். இந்த கண்கள் செய்யும் பயன் அவன் விழாக்களை காணுவதே.





ஆலமே அமுத மாக உண்டுவா னவர்க்க ளித்துக்
காலனை மார்க்கண் டர்க்காக்  காய்ந்தனை அடியேற் கின்று
ஞாலம்நின் புகழே யாக  வேண்டும்நான் மறைக ளேத்துஞ்
சீலமே ஆல வாயில்  சிவபெரு மானே என்றார்

 நான்மறைகளும் போற்றும் சீலமானவரே! திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் பெருமானாரே! தாங்கள் நஞ்சினையே அமுதமாய் உண்டு தேவர்க்கு அருள் செய்ததுடன், மார்க்கண்டேயருக்காகக் காலனையும் உதைத்து அருளினீர்! இன்று அடியேனுக்கு அருள் சுரந்தீர். இந்நிலவுலகம் முழுதும் தங்களது புகழே ஆகப் பரவவேண்டும் என வேண்டிக் கொண்டார்.                 




நமச்சி வாயவே ஞானமுங் கல்வியும்
நமச்சி வாயவே நானறி விச்சையும்
நமச்சி வாயவே நாநவின் றேத்துமே
நமச்சி வாயவே நன்னெறி காட்டுமே



ஞானமும் , கல்வியும் , நானறிந்த வித்தையும் பஞ்சாட்சரமே ; நா கூறி வழிபடுவதும் அதனையே ; நன்னெறி காட்டுவதும் அத்திருமந்திரமேயாகும் .


விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல்
உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம்
பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை
நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.



வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும் . இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும் .





பேராசை யாம்இந்தப் பிண்டமறப் பெருந்துறையான்
சீரார் திருவடி யென்றலைமேல் வைத்தபிரான்
காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி
போரார் புரம்பாடிப் பூவல்லி கொய்யாமோ.



 வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே

 என்  வீடு,என்  மனைவி, என்  மக்கள்,என் செல்வம்,   நான் எவ்வளவு  ஆள், எவ்வளவு படித்தவன், எவ்வளவு புத்திசாலி என்று மனிதன் நான் எனது என்று சொந்தம் கொண்டாடுகிறான்.

 எது அவன் சொந்தம் ? எது அவன் உடமை ? மனிதன் தான் ஒரு பொம்மலாட்ட பொம்மை என்று அறிந்தான் இல்லை. எல்லாம் தன்னால் தான் நடக்கிறது என்று  நினைக்கிறான்.

அப்படி நினைப்பவர்களையும் ஆட்டுவிப்பவன் அந்த  இறைவன்.

அவனை எப்படி வாழ்த்துவது ? நாம் வாழ்த்தி அவனுக்கு என்ன ஆகப் போகிறது ? வாழ்த்துவது என்று முடிவு செய்து விட்டால் என்ன சொல்லி வாழ்த்துவது.மாணிக்கவாசகர் திகைக்கிறார் ....




 வான் முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவுஇலாது உயிர்கள் வாழ்க
நான் மறை அறங்கள் ஓங்க நல்தவம் வேள்வி மல்க
மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்.

 கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிச் செய்தது கந்த புராணம். அதில் வரும் வாழ்த்துப் பாடல் இது.


மழை எப்போதும் குறைவில்லாமல் பெய்ய வேண்டும். எல்லா வளங்களும் சுரக்க வேண்டும். மன்னன் முறையாக அரசு செலுத்த வேண்டும். உயிர்கள் எல்லாம் குறை இன்றி வாழ வேண்டும். வேதங்களில் சொல்லப் பட்ட அறங்கள் ஓங்க வேண்டும். தவ வேள்விகள் நிகழ வேண்டும். மேன்மையான சைவ நீதி உலகம் எல்லாம் விளங்க வேண்டும்.

எவ்வளவு ஒரு உயர்ந்த மனம்.

 அது என்ன சைவ நீதி ? அதை அறிந்து கொள்ள ஒரு ஆயுட்காலம் போதும் என்று தோன்றவில்லை. கடல் போல விரிந்து கிடக்கிறது அது. மிக மிக ஆழமாக சிந்தித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.


எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். மழை பெய்ய வேண்டும். வளங்கள் பெருக வேண்டும். நல்லாட்சி வேண்டும்...எவ்வளவு பெரிய மனம். எவ்வளவு உயர்ந்த மனம்.

இதை தினம் ஒரு முறை வாசியுங்கள்.

மனம் விரிந்து மகிழ்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பாருங்கள்.








என்ன அன்பர்களே.. வாருங்கள் சைவம் தழைக்க தொண்டாற்றுவோம். மீள்பதிவாக சென்ற ஆண்டு அறுபத்து மூவர் விழா பற்றி கீழே கொடுத்துள்ளோம். உண்டு மகிழ்க.

மீள்பதிவாக:-

கொடுப்பதும் பெறுவதும் - http://tut-temple.blogspot.in/2017/10/blog-post_66.html


No comments:

Post a Comment