Thursday, March 22, 2018

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

கோவில் வழிபாட்டில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

சென்ற பதிவில் யார் உண்மையான பக்தன் என்று அறிந்தோம். இருந்தாலும் கோவிலுக்கு செல்ல வேண்டாம் என்று நாம் சொல்லவில்லை. எப்படி செல்ல வேண்டும்? எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று திருக்கோவில் தரிசனம் முறைகள் உண்டு. இவற்றை நாம் கடைபிடிக்கின்றோமா என்பது நமக்குத் தெரியாது. சும்மா பத்தோடு பதினொன்று..அத்தோடு இது ஒண்ணு என்று தான் நாம் கோவிலுக்கு செல்கின்றோம். பண்டைய காலத்தில் கோவில்கள் கலை,உணவு,மருத்துவம்,ஆரோக்கியம் என அனைத்தும் வழங்கும் இறையின் மகத்துவம் மிக்க இயற்கையின் இன்பம் தருவிக்கும் இடங்களாக இருந்தன. ஆனால் இன்று மிகப் பெரும் கேள்விக்குறி தான் நம்முன் நிற்கின்றது.

கோவிலுக்கு எப்படி செல்ல வேண்டும்? எப்படி வழிபட வேண்டும் என்பது போன்ற செய்திகளை இங்கே தொகுத்து தருகின்றோம்.1. பிரகாரம் வலம் வரும் போது வேகமாக நடக்கக் கூடாது.
ஆனால் எங்கு சென்றாலும் நிதானமாக இருக்கும் நாம், கோவிலுக்கு சென்றால் மட்டுமே மிக மிக விரைவாக தரிசனம் பெற நினைக்கின்றோம். அதுவும் வரிசையில் நின்று தரிசனம் பெறுவது என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு சோம்பேறித்தனம், நேரமின்மை என அடுக்கடுக்காக காரணங்கள். நேரமின்மை என்று காட்டி குறுக்கு வழி தரிசனம் வேறு. கோவிலுக்கு செல்வதே நாம் ஒழுக்கத்தை கடைபிடிக்கவே. மற்றவர்கள் செய்கின்றார்கள் என்று நீங்களும் செய்யாதீர்கள்.

2. வீண் வார்த்தைகளும், தகாத சொற்களும் சொல்லக் கூடாது.
இதுவும் மிக சரளமாக நடைபெறும் ஒன்று. கோவிலுக்கு சென்ற பின்பு தான் ஏகப்பட்ட பேச்சுக்கள். அலைபேசி எடுத்து பேசுதல் என தொடர்கிறது. இறைவனுடன் தொடர்பு கொள்ள செல்லும் போது, அலைபேசி போன்ற தொல்லை தரும் தொடர்புகள் எதற்கும்? அணைத்து விட்டு செல்லுங்கள். மனதை தூய்மைப் படுத்தி செல்லுங்கள்.

3. சோம்பல் முறித்தல், தலை சிக்கெடுத்தல், தலைவிரித்து போட்டுக் கொண்டு செல்லுதல், வெற்றிலை போடுதல், பாக்கு போடுதல்,பொடி போடுதல் போன்ற செய்கைகள் கூடவே கூடாது.


4. பிறப்பு,இறப்பு தீட்டுக்களுடன் செல்லக் கூடாது.

5. தலையில் தொப்பி, முண்டாசு அணியக் கூடாது. இதனை அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டுகின்றோம்.

6. கொடி மரம், பலிபீடம், நந்தி கோபுரம் இவற்றின் நிழலை மிதிக்க கூடாது.

7. கவர்ச்சியான ஆடைகள் அணியக் கூடாது. கண்ணை உறுத்தும் ஆடைகள், மேலை நாடு உடைகள் போன்றவற்றை அணிவதை தவிர்க்கவும்.

8. நந்தி தேவருக்கும், சிவலிங்கத்திற்கு இடையில் போகக் கூடாது.

9. தரிசனம் செய்த பின், பின்னால் சிறிது தூரம் நடந்து, பின்னர் திரும்ப வேண்டும். இதனை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். சபரிமலை யாத்திரையில்  மாளிகை புரத்து அம்மனை தரிசனம் செய்து விட்டு, இதே போல் தான் பின்னாலேயே படி வரை வருவார்கள்.

10. ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.

11. நீராடாமல் கை கால்களைச்  சுத்தம் செய்யாமல் செல்லக்கூடாது.

12. பகவானுக்கு நேர் எதிர் வழியில் செல்லாது பக்கத்து வழியில் செல்ல வேண்டும்.

13. விளக்கேற்றும் போதும், விளக்கில்லாத போதும் செல்லக்கூடாது.

14. புனித நீர்க்குடத்தை மூடாமலும், இறைவனின் நைவேத்தியத்தை மூடாமலும் வைக்கக்கூடாது.

15. வேறு காரியங்களுக்கு வாங்கிய பொருளை இறைவனுக்கு அர்ப்பணிக்கக் கூடாது.

16. இறைவனின் மந்திர உபதேசம் பெறாமல் ஆராதனை செய்யக்கூடாது.

17. மணமில்லாத மலர்களை சமர்ப்பிக்க கூடாது.

18. கோவிலுள் குப்பை கொட்ட கூடாது.

19. கோவிலுள் ஓடுதல், சிரித்தல், அதிர்ந்து நடத்தல், சினந்து பேசுதல், தற்பெருமை பேசுதல், சமய ஏற்றத்தாழ்வு பேசுதல் கூடாது.

20. துளசியையும் மற்றைய பூக்களையும் நீர்கொண்டு அலம்பாமல் கோவிலுள் எடுத்துச் செல்லக் கூடாது.
21. கோவிலுள் தீர்த்தம், சடாரி, துளசி, பிரசாதம் இவை பெறாமல் திரும்பக்கூடாது.

22. அர்ச்சகர்கள் தரும் குங்குமம் பிரசாதம் போன்றவற்றை கீழே சிந்தக் கூடாது. இறைவன் பிரசாதத்தை பிறர் கால்களில் படுமாறு கீழே போடுவது நல்லதல்ல.

23. ஆமணக்கு எண்ணையை திரியிட்டு கோவில்களில் விளக்கு ஏற்றக் கூடாது.

24. ஒரு கையால் தரிசனம் செய்யக் கூடாது.

25. மேலே துண்டுடன் தரிசனம் செய்யக் கூடாது.

26. கைலியுடன் தரிசனம் செய்யக் கூடாது. படிகளில் தீபம் ஏற்றக் கூடாது. அப்படி ஏற்றுவதாக இருந்தால் முறையாக குருக்களிடம் அனுமதி பெற்று ஏற்றவும்.

27. கோயிலுக்குள் உயர்ந்த ஆசனத்தில் அமரக் கூடாது.

28. பலிபீடத்திற்கு உள்ளே உள்ள சன்னதியில் யாரையும் வணங்கக் கூடாது.

29. ஆலயத்தில் புகைப்படம் எடுக்க கூடாது. குறிப்பாக சொல்லப் போனால், ஆலயத்தினுள் மின்சாரம் செல்ல அனுமதிக்க கூடாது. ஆனால் இன்றைய காலத்தில் மின்சாரம் இன்றி என்ன செய்வது? அந்த காலத்தில் தீப ஒளி வெள்ளத்தில், கருவறையின் கதகத்தில் பெரும் தரிசனத்திற்கு இன்று நாம் பெரும் தரிசனம் ஈடாகுமா? நாமும் இந்த தவற்றை பல முறை செய்து இருக்கின்றோம். பின்னர் குருக்களிடம் கேட்டு அனுமதி வாங்கி தான் புகைப்படம் எடுத்து வருகின்றோம். ஆரம்ப கால பதிவுகளில் கோவில் கருவறை படங்கள் இருக்கும். நமக்கு இந்த செய்தி உணர்த்தப்பட்டதும் தல வரலாற்று புத்தகம் வாங்கி, அதனை தான் தற்போது வெளியீடு செய்து வருகின்றோம்.ஏற்கனவே சொன்னது போல், அலைபேசியை அணைத்து விட்டு, இறையோடு பேசுங்கள்.
30. அஷ்டமி, நவமி, அமாவாசை, பௌர்ணமி, மாதப் பிறப்பு, சோமவாரம்,பிரதோஷம்,சதுர்த்தி போன்ற தினங்களில் வில்வம் பறிக்கக் கூடாது. அவ்வாறு தேவைப்பட்டால் அந்த நாளுக்கு முந்தைய தினம் இரவே பறித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அட.!.30 குறிப்புகள் வந்து விட்டது. மீண்டும் அடுத்த பதிவில் கோவில் வழிபாடு முறைகள் பற்றி உணர்வோம்.

இந்த பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும்...🖌