Subscribe

BREAKING NEWS

12 July 2018

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

வள்ளலார்

மிகப் பெரும் வாழும் சித்தர், மகான், வள்ளல். ஆன்மிகத்திற்கும் மட்டும் அல்ல..அறத்திற்கும் வள்ளல். ஆன்மிகமே அன்னதானத்தில் தான் அடங்கி இருக்கின்றது, ஒரு வேளை வயிற்றிற்கு சோறிடாது என்ன தான் ஆன்மிகம், அறம் என்று உபதேசித்தாலும் அது விழலுக்கு இறைத்த நீர் தான். வள்ளலார் என்று சொன்னாலே அன்னதானம் தான் நம் கண் முன் நிற்கின்றது. எத்துணை எத்துணை சான்றோர் பெருமக்கள் இன்றும் அந்த அறப்பணியை செய்து கொண்டிருக்கின்றார்கள். வள்ளலாரும் அவர் தம் மார்க்கமும் பற்றி பேசுவது பெருங்கடலில் சென்று ஒரே ஒரு நீர்த்துளியை எடுத்து பருகுவது போன்றதாகும்.எடுத்த உடனே திருவருட்பா, அகவல் என்று சென்றால் அது கண்ணை கட்டி காட்டில் விட்ட கதையாகி விடும். அதற்கு முதலில் அருகில் உள்ள  வள்ளலார் சபைக்கு சென்று சேர வேண்டும்.
அவர்களின் வழியொற்றி நடந்தால் தான் நமக்கு வள்ளலாரின் வழி என்ன என்றும் புரியும். அப்படி நமக்கு கிடைத்த அடியார் பகிர்ந்து வரும் செய்திகளை இங்கே தொகுத்து தர இருக்கின்றோம். 

 அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் என்று வள்ளலார் வேண்டுகின்றார் என்றால் அவரின் மனம்,மொழி,மெய் எவ்வளவு தூயதாக இருக்க வேண்டும். அந்த நிலையை அனைவரும் பெறுவதே அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் ஆணையும் கூட.





முதலில் நாம் வள்ளலாரை வரவேற்போம். சுத்த சன்மார்க்கம் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும், வள்ளலாரைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.  மனிதர்களாகிய நாமெல்லாம் பிறப்பு தான் எடுத்து வருகின்றோம். மகான்கள் எல்லாம் அவதார புருஷர்கள். பிறந்த காரணம் நாம் அறிந்திலோம். ஆனால் திருமூலர் சொல்கின்றார், என்னை நன்றாக இறைவன் படைத்தனன்; தன்னை நன்றாக தமிழ் செய்யுமாறு என்று..அதே போல் வள்ளலார் தம் வருகையை வருவிக்க உற்றேன் என்று கூறுகின்றார்.

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.

வருவிக்க உற்றேன் என்றால் அவர் ஏற்கனவே இறைவனோடு, அருட்பெருஞ்ஜோதியோடு இரண்டறக் கலந்தவர். அங்கிருந்து வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபில் நமக்காக வந்தவர் ஆவார்.



தோபா சுவாமிகளால் உத்தம மனிதர் என்று அழைக்கப்பட்டுள்ளார் என்பது இங்கு நாம் சிறப்பித்து கூற வேண்டிய செய்தியாகும். இறையிலிருந்து வருவிக்க உற்ற உத்தமர் அன்றோ இவர். நம்மைப் போன்ற பித்தர் எல்லாம் சித்தம் உணர வழிகாட்டும் வள்ளல் அவர்.


வள்ளலார் ஒரு பல்துறை வல்லுநர் என்று கூறுவது சாலப் பொருந்தும். அருளாளர், நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர், பதிப்பாசிரியர், சித்த மருத்துவர், பத்திரிகையாசிரியர், சீர்திருத்தவாதி என இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.தமிழகத்தின் முதல் சீர்திருத்தவாதி. வள்ளலாரின் வருகைக்கு பின்தான் ஆன்மிகம் ஒரு புதிய பரிணாமம் தொட்டது. அன்ன  சேவை அகிலம் முழுக்க பரவியது. பெண்கல்விக்கு ஊக்கமளித்தார், கடவுளை அன்பாய்க் கண்டார். அதனால் தான் சத்திய தரும சாலை உருவானது. மதத்தின் மூட நம்பிக்கை மறுத்தார்.


இது மட்டுமா? இன்னும் பல சிறப்புகளை வள்ளலார் சேர்த்துள்ளார் என்றால் இது சாதாரண மனிதனால் முடியுமா? புனிதனால் மட்டுமே இது சத்தியமாய் சாத்தியமாகும்.



சரி. வள்ளலார் பற்றி சிறிது உணர்ந்து கொண்டோம். இனி அவரின் உபதேசங்களை பார்ப்போம்.ஒரு தடவை படித்தால் புரியாது. ஓராயிரம் தடவை படித்தால் தான் உணர்ந்து நாம் கைக்கொள்ள முடியும். அடுத்து வள்ளலார் என்று சொன்னால் நம் நினைவிற்கு வருவது திருஅருட்பா. நமக்கு என்று வாய்க்கும் என்று தெரியவில்லை. உணர்ந்தபின் இங்கே அறிய தருகின்றோம்.



மேற்சொன்ன செய்திகள் நமக்கு மிக மிக எளிதாக கிடைத்துள்ளது. சரியாக பிடித்து வாழ்க்கையில் பயன்படுத்துங்கள். சுமார் பல ஆண்டுகள் அருட்பெருஞ்சோதி பற்றி நினைத்தால் தான் இது போன்ற செய்திகளின் சூட்சுமம் நமக்கு புரியும். நாம் செய்த தவப் பயன். இவ்வளவு எளிதாக கிடைத்து வருகின்றது.

வள்ளலார் நான்கு வித ஒழுக்கம் பற்றி பேசுகின்றார்.

 சன்மார்க்கப் பெருநெறியின் ஒழுக்கங்கள் இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என நான்கு வகைப்படும்.


அவற்றுள் இந்திரிய ஒழுக்கம் என்பது - நாத முதலிய ஸ்தோத்திரங்களை உற்றுக் கேட்டல், மற்றவை கேளாதிருத்தல், கொடுஞ்சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல், அசுத்தங்களைத் தீண்டாதிருத்தல், கொடூரமாகப் பாராதிருத்தல், ருசியின்மீது விருப்பமின்றியிருத்தல், சுகந்தம் விரும்பாதிருத்தல், என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும்; இனிய வார்தையாடுதல், பொய் சொல்லாதிருத்தல், ஜீவஹ’ம்சை நேரிடுங்கால் எவ்விதத் தந்திரத்திலாவது தடைசெய்தல், பெரியோரிடத்திற் செல்லுதல் - என்றால் - சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் உயிர்க்கு உபகரிக்கு நிமித்தம் சஞ்சரித்தல், உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல், மலஜல பாதைகள் அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் அளவைபோல் தந்திர ஓஷதிகளாலும் ஆகாரப் பக்குவத்தாலும் பவுதிகப் பக்குவத்தாலும் செய்வித்தல் என்னும் கருமேந்திரிய ஒழுக்கமும் ஆகும்.



கரண ஒழுக்கம் என்பது - சிற்சபையின் கண் மனதைச் செலுத்துவது தவிர மற்றெந்தவகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற்குறித்த இடத்தில் நிறுத்துதல், பிறர் குற்றம் விசாரியாதிருத்தல், தன்னை மதியாதிருத்தல், செயற்கைக் குணங்களாலுண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாயிருத்தல், பிறர்மேற் கோபியா திருத்தல், தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிரம அதிக்கிரமப் புணர்ச்சி செய்யாதிருத்தல் முதலியவாம்.



ஜீவ ஒழுக்கம் என்பது - எல்லா மனிதரிடத்தும் ஜாதி, சமயம், குலம், கோத்திரம், சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம், உயர்வு, தாழ்வு முதலிய பேதமற்றுத் தானாக நிற்றல் முதலியவாம்.


ஆன்ம ஒழுக்கம் என்பது - எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்களிடத்து முள்ள ஆன்மாக்களிடத்து மிரங்கி, ஆன்மாவே சபையாகவும் அதனுள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் முதலியவாம்.

இங்ஙனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் என்னு மிவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை யுணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுகவேண்டும்; ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அரிய ஒழுக்கங்களை திருவருட்டுணை பெற்ற பின்னரன்றிக் கைகூடா. ஆதலால், அவ்வொழுக்கங்களைப் பெற்று ஒழுகவேண்டுவதற்கும் ஆன நன்முயற்சிகளில் பழக வேண்டும்.

இன்னும் இவற்றை சுருக்கி, விரித்து கொடுத்துள்ளோம். மீண்டும் மீண்டும் படித்து மனதில் இருத்திக் கொண்டு பின்பற்றுங்கள்.






இத்துடன் இந்தப் பதிவில் நிலை பெறுவோம். வாழ்வின் அடிப்படையே ஒழுக்கம் தான். வள்ளலார் வழியில் நான்கு ஒழுக்க நிலைகளை அறிந்து உணர்வோம். இன்னும் சாகக் கல்வி, மரணமிலா பெருவாழ்வு போன்ற செய்திகளை அடுத்து வரும் பதிவுகளில் சிந்திப்போம். சிறந்த பதிவுகளை நமக்கு அளித்து வரும் திரு.வள்ளலார் மோகன் ஐயா அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

- வள்ளலார் மலரடி தொழுவோம்.

மீள்பதிவாக :-

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம், வாடினேன் ! - http://tut-temple.blogspot.com/2018/05/blog-post_18.html

எந்தையும் தாயும் - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு 21/05/2018 - http://tut-temple.blogspot.in/2018/05/21052018.html

திருஅருட்பா அமுது உண்போம் - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_23.html

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா - கூடுவாஞ்சேரி அகத்தியர் ஆயில்ய ஆராதனை அறிவிப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_22.html

அகத்தியருக்கு ஆயில்ய ஆராதனை -புரட்டாசி -2017- http://tut-temple.blogspot.in/2017/09/2017.html

அகத்திய முனிவரின் பஞ்ச யாக ஷேத்திரம் - பஞ்செட்டி சதய பூஜை அழைப்பு - http://tut-temple.blogspot.in/2018/04/blog-post_74.html


1 comment: